Friday, 30 March 2018

காவிரி மேலாண்மை வாரியம்!
இப்போது எதற்காக இந்தக் கூக்குரல்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த நீதிமன்றக் கெடு முடியும் நாளில் மத்திய அரசு ஒரு முக்கியமான விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது!

ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கிடைத்தவுடன்
ஆக்ட் என்ற வார்த்தைக்கும் காவிரி என்ற வார்த்தைக்கும், அத்தாரிட்டி, கமிட்டி போல தீர்ப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளுக்கும் வரிசையாக விளக்கம் கிடைத்ததும் நிச்சயம் முழுப் புரிதலோடு வாரியத்தை அமைத்தே தீரும் முனைப்பில்தான் மத்திய அரசு இருக்கிறது!

Without prejudice to the provisions of Section 6, the Central Government may, by notification in the Official Gazette, frame a scheme or schemes whereby provision may be made for all matters necessary to give effect
to the decision of a Tribunal.
A Scheme framed under Sub-Section (1) may provide for:
(a) The establishment of any authority (whether described as such or as a committee or other body) for the implementation of the decision or directions of
the Tribunal.
(b) the composition, jurisdiction, powers and functions of the authority, term of office and other conditions of service, the procedure to be followed -by and the manner of filling vacancies among the members of the authority.
(c) The holding of a minimum number of meetings of the authority every year, the quorum for such meetings and the procedure there at.
d) The appointment of any standing, ad hoc or other committees by the authority.
(e) The employment of a Secretary and other staff by the authority, the pay an allowances and other conditions of service of such staff.
(f) The constitution of a fund by the authority, the amounts that may be credited to such fund and the expenses to which the fund may be applied.
(g) The form and the manner in which accounts shall be kept by the authority.
(h) The submission of an annual report by the authority of its activities.
(i) The decisions of the authority which shall be subject to review.
(j) The constitution of a committee for making such review and the procedure to be followed by such committee;
(k) Any other matter which may be necessary or proper for the effective implementation of the decision or directions of the tribunal.

அந்நிய மொழியில் இருக்கும் இவ்வளவு கடுமையான பதங்களுக்கு விளக்கம் தெரியாமல் ஒரு பிழையான முடிவை எப்படி ஒரு நேர்மையே உருவான அரசு எடுக்கமுடியும்?

அப்படி என்ன அவசரம் உங்களுக்கு?

இன்று இணையத்தில் ஒருவர் சிலாகித்திருந்தார்
இது ஒரு தந்திரமான மூவ்!
Scheme என்பது வேறு ஏதோ என்று மத்திய அரசே நம்பாததால்தான் உதவாக்கரைக் குழுக்களை அமைத்து கர்நாடக வாக்குகளைக் கவர முயற்சி செய்யாமல், தேர்தல் வரை ஒத்திப்போடும் முயற்சியாக தாமதமாக விளக்கம் கேட்கிறது!!!!

இப்படி தாயுள்ளத்தோடு தமிழக நலனுக்காக ஒரு மத்திய அரசு இருக்கையில் உங்களுக்கு என்ன கவலை?

காவிரியில் தண்ணீர் வரும்வரை, இன்னும் மிச்சமிருக்கும் மணலை அள்ளிக்கொண்டிருங்கள்!

வாங்கிக்கொள்ள கேரளமும் மாலத்தீவும் காத்திருக்கின்றன!

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் உங்களுக்குக் கொடுக்க கட்சித் தலைமைகளுக்கு பணம் வேண்டாமா?

இப்படித்தான் நம் அரசியல் கட்சிகளும் நினைக்கின்றன!

இல்லாவிட்டால் கெடு முடியும் நாள் வரை, "இன்னும் எட்டு மணி நேரம் இருக்கிறது, எட்டு நிமிடம் இருக்கிறது" என்று ஏதோ ராக்கெட் லான்ச்க்கு நேரம் குறிப்பதுபோல் குறித்துக் காத்திருப்பார்களா?

வாரியம்
அதன் உறுப்பினர்கள்
அவர்களுக்கான தகுதிகள் 
என்று எல்லாவற்றையும் நீதிமன்றம் வகுத்துக் கொடுத்தபின், மத்திய அரசு வாரியம் அமைப்பதற்கு எந்தத் துரும்பையும் அசைக்காமல்
நேற்றுக் கூட்டிய மந்திரிசபைக் கூட்டத்தில் காவிரி பற்றிய விவாதமே எடுத்துக்கொள்ளாத நிலையில்
நேற்று மாலை ஐந்து மணி வரைக்கும் நம் அரசியல்வாதிகள் எந்த நம்பிக்கையோடு காத்திருந்தார்கள், மக்கள் மடையர்கள் என்பது தவிர?

அரசியலின் அரிச்சுவடி தெரிந்த எவனும் சொல்லிவிடுவான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போதைய மத்திய அரசும், பிரதான எதிர்க்கட்சியும் ஒருபோதும் முயலாது என்று!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்துகொள்ள அவை என்ன முட்டாள்களா?

இது முடிந்தபின் 2019 நாடாளுமன்றத் தேர்தல் இருப்பது அவற்றுக்குத் தெரியாதா?

இரண்டு கட்சிக்குமே கணிசமான எம்பிக்களை அளிக்கப்போவது கர்நாடகமே தவிர தமிழகம் அல்ல என்பது ஊரறிந்த ரகசியம்!

இங்கு தேசியக் கட்சிகள் நோட்டாவுக்கும் கீழ்!

எனில் அவர்களுக்கு இந்த மாநிலத்தின்மீது என்ன அக்கறை இருக்க முடியும்?

இதில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார் ஹெச். ராஜா!


இதை கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் சொல்லுவாரா? எனில், நாம் அனைவரும் கூட்டமாகப் போய் கள்ள ஒட்டு போட்டாவது அவரை ஜெயிக்க வைப்போம்!

சரி, இன்று நம்மை ஆளும், ஆண்ட, ஆளத்துடிக்கும் கட்சிகள் என்ன செய்தன?

ஆளும் அடிமை திமுக ஏப்ரல் இரண்டாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகிறது!


பிரதான எதிர்க்கட்சி அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டவும், ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டவும் முடிவு செய்துவிட்டது!காவிரிக்கரையில் குடியிருக்கும் மக்கள் மேடான பகுதிக்கு உடனே போய்விடுவது நல்லது! இவர்கள் கொடுக்கும் இந்த அழுத்தத்தால் காவிரி கரைபுரண்டு ஓடப்போகிறது!

சரி, மத்த ரட்சகர்கள் என்ன செய்கிறார்கள்?

அன்புமணி என்னும் நான், வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றி தனி ஒருவனாக புரட்சிகரமாக போராடுகிறார்!

மைய்யமும் ஆன்மீகமும் இன்னும் கதவையே திறக்கவில்லை!

எப்படியோ, ஐபிஎல் ஆரம்பிக்கும்வரை ஒப்பேற்றிவிட்டால் போதும்!
அதன்பிறகு மகாஜனங்கள் உலகையே மறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை!

கொஞ்சம் நிதர்சனம் பேசுவோமா?

தேசியக்கட்சிகள் தமிழக நலனை பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை!
அவர்களுக்கும் தமிழகத்துக்கும் ஏழாம் பொருத்தம்!
தாங்கள் தனித்து நின்று ஒரு இடம் கூட வெல்லமுடியாத மாநிலத்துக்காக, மாறி மாறி அரியணையில் அமரும் கர்நாடகத்தை பகைத்துக்கொள்ளும் முட்டாள்கள் அல்ல அவை!

தலை இல்லாத, இரண்டு முண்டங்களை மட்டுமே சுமக்கும் அதிமுகவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு!
ஆகவே, விடிவதற்குள் கிடைத்தவரை சுருட்டிக்கொண்டு ஓடும் திருடர்களின் மன நிலையில்தான் அவர்கள்!
அவர்களுக்கு மக்கள் நலன் என்பது ஏதோ பொருள் விளங்கா பாஷை!

செயல் தலைவர் செயல்படவேண்டிய நேரத்தில் செயல்பட்டதாய் சரித்திரமே இல்லை!
நேற்று ஒரு பேட்டியில் துரைமுருகன் கிழித்து தோரணம் கட்டியிருந்தார் அதிமுகவை!
அதில் சொன்னபடி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வீட்டை முற்றுகையிடப் போவதில்லை!
ஆனால், ஏன் அதே வேலையை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யக்கூடாது?
ஒருவேளை டெல்லிவரை செல்ல அவர்களிடம் காசில்லையோ என்னவோ?
எனில், இங்கிருந்தபடியே கடையடைப்பு, மறியல், உச்சகட்டமாக தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா என்று ஏன் போராடக்கூடாது?
தமிழகத்தின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும் விஷயத்தில் இப்படி ஏன் வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் வதக்கிக்கொண்டிருக்கிறார்கள்?
தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள இதைவிட ஒரு சிறந்த தருணம் வேறு எப்போது வாய்க்கும்?

எனில், காங்கிரசை தர்மசங்கடப் படுத்தக்கூடாது என்பதுதான் திமுகவின் நோக்கமா?
எடப்பாடியும் பன்னீரும் மோடிக்கு பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது! திமுக தயங்கும் சிதம்பர ரகசியம் என்ன?
இது ஒரு விடை தெரியாக் கேள்வி!

அவர்களை விடுங்கள்,
நாம் என்ன செய்யப்போகிறோம்?

கண்ணெதிரே ஏரிகளும் குளங்களும் வீட்டு மனைகளாகவும் என்ஜினீயரிங் கல்லூரிகளாகவும் மாறியபோது என்ன செய்தோமோ,
காவிரியில், பாலாற்றில், அமராவதியில் ஆயிரக்கணக்கான லாரிகள் லட்சக்கணக்கான டன் மணலை ராப்பகலாக அள்ளிக்குவித்தபோது என்ன செய்தோமோ,
தெருவுக்கு நாலு சாராயக்கடை திறந்துவைத்து ஊற்றிக்கொடுத்தபோது என்ன செய்தோமோ,
தமிழக மக்களை இலவச எலும்புத்துண்டுகளை பொறுக்கித் திரியும் நாய்களாக மாற்றியபோது என்ன செய்தோமோ, அதையே தொடர்ந்து செய்வோம்!

தேனி பாலைவனத்தில் ஒட்டகப்பண்ணை வைத்து, காவிரி கற்படுகையில் ஓடிவிளையாடி நம் பிள்ளைகள் வளரட்டும் - கூடங்குளமோ, ஸ்டெர்லைட்டோ அவர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்காமல் விட்டால்!

அப்போது உதயநிதியும், விஜய்யும் கர்நாடகாவோடு இதே கீரி, பாம்பு வைத்து மோடி மஸ்தான் வித்தை காண்பித்துக்கொண்டிருக்கட்டும்!

அப்படி இல்லாது,
ஒரு அரை சதவிகித வாய்ப்பில்,
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில் அமைந்து,
தேசியமயமாக்கப்பட்ட நதிகளின் நீர் மாநிலங்களின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கப்படட்டும்!

அப்போதும் 
நம் தமிழக அரசியல்வியாதிகள் மக்களை மறந்து சுயநல பேரம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காதவாறு நல்ல புத்தியை இறைவனோ, இயற்கையோ அருளட்டும்!