Tuesday, 28 April 2015

இருபத்தைந்து வயது, அதற்கு மேலும், கீழுமுள்ள பெண்களுக்கு!


மீனம்மா என்ற ஒரு மிகப்பிரபலமான பெண் ID இலிருந்து நேற்று (26.4.2015 ​ ஞாயிறு) ஒரு TL காண நேர்ந்தது.
ஷாக் வேல்யுவுக்காகவோ, கவன ஈர்ப்புக்காகவோ (இந்த இரண்டு தேவைகளையும் அந்த ID கடந்து பலநாட்கள் ஆகிறது) சமயங்களில் போடும் பதிவுகளையும் மீறி பல கவிதைத்தனமான பதிவுகள் அதில் வருவதுண்டு.
அந்த TLக்கு எதிர்வினையாக எழுத நினைத்து,
பின் அது தேவையற்றது,
வழக்கமான நம் பாணியில் அந்தக்கருத்தை ஒட்டி ஏதோ எழுதி, நம்மை விரும்பியோ, விரும்பாமலோ cc வரும் கட்டாயத்துக்காகப் படிக்கும் தலையெழுத்துக் கொண்ட ஒரு சிறு குழுவுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்து எழுதும் பதிவு இது!


பெண்களுக்கு - ஒரு ஆணின் பார்வையில்!டிஸ்கி ஏதும் இல்லை- எல்லாப் பெண்களுக்கும் - ட்விட்டரில் இருக்கும் என் மகள் உட்பட!

ஆணுக்குப் பெண் மேலும் பெண்ணுக்கு ஆண் மேலும் பாலினக்கவர்ச்சி தவிர வேறு நட்போ, மரியாதையோ சாத்தியமே இல்லை.
அதிலும், ஆண், படுக்கை ஒன்றே நோக்கமாகக்கொண்டு, மகாத்மா வேடம் வரை பூண்டு எந்நேரமும் காம வெறியில் அலையும் ஜந்து. அவனுக்குப் பெண் என்பவள் அவன் வக்கிர இச்சைகளை எப்பாடு பட்டேனும் தீர்த்துக்கொள்ள தேவைப்படும் ஒரு போகப்பொருள்.

பெண்ணும் ஒன்றும் உயர்ந்தவள் அல்ல. அவளுக்கும் காம இச்சைகள் தவிர ஆணுடன் பகிர்ந்துகொள்ள ஏதுமில்லை.
அப்படி ஒரு ஆண் பின்னால் போவதைவிட, சுய இன்பம் காணுதல் மேலானது மட்டுமல்ல. 18 வயதுக்குமேல் அது அவசியமானதும் கூட!

இது, பெண்களுக்கு, பெண் பெயரால் பிரபலமான ஒருவர் சொல்லும் செய்தியின் சாரம் - என் கீழான ஆண் புத்திக்கு எட்டிய வரையில்.

காதல் புனிதமானது என்று காதலைத் தாங்கிப்பிடிக்க எனக்கு விருப்பமில்லை! என் சான்றிதழ் காதலுக்குத் தேவையில்லை!

உருகி உருகிக் காதல் பதிவுகள் எழுதியவர்களுக்கே இன்று காதல் என்பது காமம் மட்டும் தீர்க்கும் கருமமாய்ப் படும்போது, அதில் நம் கருத்துக்கு வேலை இல்லை.

ஆனால் ஒட்டுமொத்த ஆணும், இருபத்தைந்து வயதுப்பெண்ணும் என்ற பொதுப்படைக் கருத்து வியக்கவைக்கிறது. என்னவொரு தெளிவு, இந்தக் காமாந்திர ஆண்களைப்பற்றியும், காமம் தணிக்க வழி தெரியாத பெண்களைப்பற்றியும்!

இந்தப் பார்வை முற்றிலும் தவறு என்ற புரிதலுடனும், எனக்கிருக்கும் அரை  நூற்றாண்டு ஆணியஅனுபவத்துடனும் இது!

///////////////////////////////////


ஆணும் பெண்ணும் வேறுவேறு கிரகவாசிகள் அல்ல. ஒருவரை ஒருவர் அடித்துத் தின்னப்பார்க்கும் விரோதிகளும் அல்ல.
ஒரு சின்ன க்ரோமோசோம் வேறுபாட்டால், இனவிருத்திக்குத் தேவையாக இருவேறு பால்களாகப் பிறந்த சக உயிரினங்கள்.

மனிதன் ஏதோ அறிந்து, எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே காதல் என்பது காமத்திலிருந்து வேறுபடுத்தியே பார்க்கப்பட்டு வந்துள்ளது.
மட்டுமல்லாமல்,
காமம் என்பதில் காதல் இல்லை என்று வன்மையாக மறுத்த எந்த ஆணும் பெண்ணும்,
காதல் என்பதில் காமமே இல்லை என்று மறுத்ததில்லை!

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உடல், இனக்கவர்ச்சியும் இணைந்த நட்பின் முதிர்ச்சியே காதல்.
இல்லையேல், நட்பைத் தாண்டி ஒரு வார்த்தை தேவையே இல்லை அந்த உறவைக் குறிக்க!

காதல், பள்ளிப் பருவத்திலோ, அல்லது கல்லூரிக் காலத்திலோ வருகையில் காமம், இனக்கவர்ச்சி சார்ந்து மட்டுமே வரமுடியும்.

25 வயதுக்கு மேல் வருகையில் மட்டுமே அது வாழ்க்கைத் துணை என்ற எண்ணத்தையும், திருமணம், எதிர்காலம் என்ற பல புரிதல்களுடன், இவன்/ இவள் நம்மோடு வாழ்நாள் முழுக்கத் துணைவர சரியான இணை என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தோடு வரும்.

இன்றைய வாழ்க்கைச் சூழல் அன்றுபோல் இல்லாமல், ஓரளவுக்கு ஆணையும் பெண்ணையும் நட்போடு பழக அனுமதித்திருக்கிறது!

அந்த நட்பு, காலம் முழுவதும் தொடரவும், காமம் உட்பட எல்லாம் பகிரவும் இவர்தான் ஏற்றவர் என்று அறியும் பக்குவத்தையும், அந்தப் பழக்கமும், அது தந்த புரிதலும் தரும்.

மேலும் அப்படி ஒருவரை மத, ஜாதி, இன மொழி மாறுபாடுகளை மீறியும் தேர்ந்தெடுக்க அவர் கொண்ட கல்வியும், அவர் வளர்ந்த சூழலும் கண்டிப்பாக உதவும்.

அப்படி இல்லாமல் வெறும் காமத்தை உங்கள் விரலின் நுனியில் தேக்கிக்கொண்டுதான் உங்கள் எதிர்ப்பாலினத்தை அணுகமுடியும் என்றால், உங்கள் கல்வியும், வளர்ப்பும் அவ்வளவு உயர்வானதில்லை என்றுதான் பொருள்.


காமம் என்னும் ஆயுதம் தாங்கிப் பெண் வேட்டையாடும் ஆணினத்தைச் சேர்ந்த என் பார்வையில்,
இன்றைய பெண்கள் செய்ய வேண்டியவை.

1. முதலில், சொந்தக்காலில் நின்று உங்களை நீங்களே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ளும், தாய் தகப்பன் உட்பட யாரையும் சார்ந்து நிற்க வேண்டாத, நிலைக்கு உயர்த்திக்கொள்ளுங்கள். அதற்கு, கல்வி என்ற வலுவான ஆயுதத்தை முடிந்தவரை கைக்கொள்ளுங்கள்.

 2. ஆண் என்பவன் உங்கள் ரட்சகனுமல்ல, விரோதியுமல்ல - வெறும் உடற்கூறால் மாறுபட்ட சக உயிரினம் என்பதை உணருங்கள்.

3. உங்களை ஜஸ்ட் presentable என்ற நிலைக்குமேல் அலங்கரித்துக்கொள்ளும் அடிமை நிலையை மாற்றுங்கள். அது ஒரு ஆணை என்னைப்பார் என்று கெஞ்சும் கவன ஈர்ப்பு மட்டுமல்ல, என் சொத்து இந்த உடல்தான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் என்பதை உணருங்கள்.

4. உங்கள் முகமோ, அழகோ, நிறமோ உங்களுக்கு அறிவைத் தருவதில்லை. இவற்றால் வராத அந்த அறிவே உங்களுக்கு வேலை வாங்கித் தரும் உண்மைக் காரணியாகும் என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். உங்கள் நிறமும், முகப்பொலிவும் உங்களை வாழ்வில் உயர்த்தும் என்ற வணிக விபச்சார விளம்பரங்களைப் புறம் தள்ளுங்கள்.
நிச்சயம் உங்கள் நிறமோ, அழகோ, ஒருமுறை உங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கலாம். ஆனால்  உங்கள் பண்பும் நடத்தையுமே மற்றவரை நிரந்தரமாக ஈர்க்கும்.

5. உங்கள் அலுவலிடத்திலும், வீட்டிலும் உங்கள் சம ஆற்றலுள்ள ஆணுக்கு நீங்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவரில்லை என்பதை தெள்ளத்தெளிவாக எல்லா வாய்ப்புகளிலும் உணர்த்துங்கள்.

6. பெண் என்பதற்காக வலிந்து தரப்படும் சலுகைகளை, உங்களால் முடிந்தவரை புறக்கணியுங்கள். அதேசமயம், ஒரு பெண் என்பதற்காக மட்டும்  மறுக்கப்படும் மறுதலிக்கப்படும் உரிமைகளை, பதவி உயர்வுகளை, சம்பளத்தைத் தயக்கமே இல்லாமல் போராடிப் பெறுங்கள்.
ஆணுக்குப்பெண் இளைப்பில்லை காண் என்று படித்ததை உண்மை என்று முதலில் நீங்கள் நம்புங்கள்.

7.  இந்த உடை அணிந்தால் ஆண் உங்கள்மேல் வந்து விழுவான், இந்த நிறம் இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றவகை விளம்பரங்களையும், பெண்கள் என்றாலே வஞ்சகிகள் என்று பேசும் சீரியல்களையும் முற்றாக ஒதுக்கும் மனநிலையைப் பெறுங்கள்.

8. உங்கள் முகமும், நிறமும், சுருக்கமில்லாத தோலும் எடுப்பான மார்பும்தான் உங்களை ஒரு ஆணை அடைய உதவும் என்றால், அவை எல்லாமே கட்டாயம், காலப்போக்கில் மாறும்போது அந்த ஆண் உங்களை என்ன காரணத்துக்காக சகித்துக்கொள்ளுவான் என்பதை சற்றே யோசியுங்கள்!

9. எப்போதும் ஒரு காமம் தீர்க்கும் வடிகாலாக நீங்கள் ஒரு ஆணைப் பார்ப்பதையும், உங்களை ஒருவன் அப்படிப் பார்ப்பதையும் அனுமதிக்காதீர்கள்.

10. உங்களைப்போலவேபுரிதலுக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு சக ஜீவனாகவே ஆணைப் பாருங்கள். உங்கள் மனச் சலனங்களை உங்கள் பெற்றோரிடமும், உங்களைப் புரிந்துகொள்வோரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். 
ஆரம்பத்தில் இவை எதிர்ப்பையோ, அதிர்வையோ ஏற்படுத்தினாலும், உங்கள் நியாயங்களை அவர்கள் புரிந்துகொள்ளுமளவு உயர்வானவை ஆக்குங்கள்.

11. உங்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளையும், உங்கள் நியாயங்களுக்கான மறுதலிப்புக்களையும், அவற்றின் அன்பின் பின்னணியைக் கருத்தில் கொண்டு மதிப்பிடுங்கள். 

12. ஜாக்கிரதை உணர்ச்சி என்பது பெண்களுக்கு இயல்பாகவே உள்ள ஒன்று. அதன் எல்லைகளை மீறி எல்லோரையும், எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

13. சில மில்லிகிராம் சதை இடமாற்றம் ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கொருவர் பார்த்து சந்தேகமோ, வெறியோ, வெறுப்போ கொள்ளவைக்கும் ஆதிமனித மனநிலையிலிருந்து நாம் விடுபட்டுக்கொண்டிருப்பதை உணருங்கள்

14. எங்காவது நடக்கும் சில விரும்பத்தகாத அசிங்கங்களை எல்லோர் மீதும் பொருத்திப் பார்க்காதீர்கள்!

15. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவையே.
உங்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் உங்கள் அறிவிலும் திறமையிலும் உழைப்பிலும் தேடுங்கள்!

16. கிளுகிளுப்புக் கதையோ, பூச்சாண்டி கதையோ சொல்லி, 15 நிமிடங்கள் விரல் நுனியில் இன்பம் தேடச்சொல்லும் அறிவுரைகளைப் புறம் தள்ளி, அந்த சில நிமிடங்களைத் தாண்டியுள்ள மீதி 23.45 மணிநேரத்தை உங்களை உயர்த்தச் செலவிடுங்கள்.

17. காதலித்துத் திருமணம் புரிய நேர்ந்தாலோபெற்றவர் உங்கள் சம்மதத்துடன் திருமணம் முடிக்க நேர்ந்தாலோ, அந்த உறவுக்கு உண்மையாய் இருங்கள்! உங்கள் இணையும் அவ்வாறே இருக்க வற்புறுத்துங்கள்.

கணவன் மனைவி உறவில் மட்டுமல்ல, எல்லா உறவிலும் நேர்மையோடிருங்கள்.

உங்கள் வாழ்வு வளமாய், மகிழ்வாய் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்!

Thursday, 23 April 2015

இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையும், இணையதள விமர்சனமும்!

இலங்கைத் தமிழர்களும், தொப்புள் கொடி உறவும்!
நேற்று காலை என் இலங்கைத் தமிழ் சகோதரியைத் தங்கை என்று அழைத்த மன்னிக்க முடியாத குற்றத்துக்கு இங்கு ஒருமையில் வசை பாடப்பட்டேன். 
இதுவரை என்னை யாரும் சொந்த வாழ்விலும் அவ்வளவு தரம் தாழ்ந்து விளித்ததில்லை.
முகம் காட்டத் தேவையில்லா இணைய சுதந்திரம் நான் யாரோடு எப்படிப் பேசவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அந்த அன்பருக்குத் தந்திருக்கிறது!

ஆனால் அது நான் நெடுநாட்களாக எழுத நினைத்ததை இன்று  எழுதத் தூண்டியது.

இலங்கைத் தமிழர் விஷயத்தில் நம் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் அரசியலே மிகுதி என்பது என் கருத்து.

தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர்கள் மட்டுமல்ல, அதை உடனே மறப்பவர்கள்.

இணையத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு யார் காரணம்?
இலங்கைத் தமிழர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களா?
புலிகள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளா?
பிரபாகரன் செய்தவை அனைத்துமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையா?

இதைத் திறந்த மனதோடு அலசினால், இன்னும் பல வசைகளை எதிர்கொள்ள வேண்டும்.
பரவாயில்லை.

இந்தியப் பிரிவினையின்போது லட்சக்கணக்கில் இந்துக்களும் முஸ்லீம்களும் கொல்லப்பட்டார்கள். 
இந்தியாவின் பல மாகாணங்கள் பற்றி எரிந்தன. பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்தன. 
சுதந்திரம் அடைந்து அறுபத்தெட்டு ஆண்டுகளாகியும் இந்தியன் என்ற உணர்வோடு பாகிஸ்தானிலும், பாகிஸ்தானி என்ற உணர்வோடு இந்தியாவிலும் வாழ்ந்து மடிந்தவர்கள் மிகப்பலர். எல்லைதாண்டி உறவுகளை சந்திக்கவே முடியாமல் பிரிந்த குடும்பங்களுக்கு அளவே இல்லை.
இத்தனைக்கும் அது ஆயுதம் ஏந்தாப் பிரிவினை.
காந்தி என்ற அகிம்சாமூர்த்தி மேற்பார்வையில் நடந்த அமைதிப் பிரிவினை.

இலங்கையில் நடந்தது போர்!

பிரிவினை கேட்டது தமிழர்களில் ஒரு குழு. அது, தன்னை எதிர்த்த தன இனத்தவரையே மூர்க்கமாகக் கொன்று குவித்து, அச்சத்தின் மேல் காட்டப்பட்ட ஒற்றுமை. 
சென்னைக் கடைத் தெருவில் சுட்டுக்கொல்லப்பட்ட உமா மகேஸ்வரன்களும், அமைதியான முறையில் தேர்தலில் போட்டியிட்டு தமிழர் உரிமைக்குப் போராட நினைத்ததால் உயிரிழந்த பிரேம தாஸ, அமிர்தலிங்கம், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, டெலோ செல்வம் மற்ற தமிழ்த் தலைவர்களும் எளிதில் மறக்கடிக்கப்பட்டனர்.

இலங்கையின் தென்பகுதித் தமிழர்கள் பிரபாகரனின் தலைமையையோ, வழிமுறைகளையோ ஏற்கவில்லை.

வடமாகாணத்துத் தமிழர்களும், இருந்த மற்ற எல்லாத் தலைவர்களும் அழித்தொழிக்கப்பட்டு, இந்தத் தலைமையை ஏற்கவைக்கப்பட்டனர்.

தேர்தலில் போட்டியிட மறுத்ததும், அதற்கு முயன்றவர்களை அழித்ததும் பிரபாகரன் செய்த மாபெரும் தவறு.

மாவீரன் என்ற பிம்பத்தைத் தகர்க்க முயல்வது என் நோக்கமல்ல.
அது அவ்வளவு எளிதுமல்ல!

செய்தவன் தமிழன் என்ற ஒரு காரணத்துக்காக, என் தேசத்தின் தலைவனை, பிரதமர் வேட்பாளனை உருக்குலைத்துப் போட்டதை நியாயப்படுத்தமுடியாது.

அன்றைக்கு அதிகாலை, சென்னை அரசு மருத்துவமனை பிணவறையில் அந்த  சதைக் குவியலைப் பார்க்க நேர்ந்த எந்த இந்தியப் பிரஜையாலும் அந்தக் குற்றத்தை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.

எல்லைதாண்டி வந்து என் மண்ணில் குண்டு வைத்துப் பல உயிர்களைக் காவு வாங்க அந்தக் குழுவுக்கு யார் உரிமை கொடுத்தது? அன்று ராஜீவோடு சிதைந்த எத்தனைபேர் குடும்பங்கள் உருக்குலைந்தன? இதற்கு ஒரு வருத்தம்கூடத் தெரிவிக்காமல், அது ஒரு துன்பியல் சம்பவம் என்று ஒற்றை வார்த்தையில் புறம்தள்ளும் தைரியத்தை அந்த மாவீரனுக்கு யார் கொடுத்தது?

மக்களைப் புலிகள் பல நேரங்களில் கேடயமாகப் பயன்படுத்தியது வரலாற்று உண்மை.

உடனே, நான் சிங்களனுக்கு வால் பிடிப்பதாய் சிலர் கிளம்பக்கூடும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு, சிங்கள அரசுக்கும், பிரபாகரனின் மூர்க்கமான வரலாற்றுப் பிழைகளுக்கும் சம பங்கு உண்டு என்பதே உண்மை.
அதற்கு சற்றும் குறையாத பங்கு, தமிழகத்தின் அரைவேக்காட்டுத் தலைவர்களுக்கும் உண்டு.

பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது தவிர, உண்மையான அக்கறை நம் தலைவர்களுக்கு இருக்குமானால்,சில எளிய கேள்விகளை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். 

கிடைக்கும் பதில்கள் உங்களுக்குப் பல உண்மைகளைச் சொல்லும்.

1. தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களின் உண்மை நிலை என்ன?

2. அங்கு தொப்புள்கொடி உறவென்று பெருமைபேசும் நம் தேசம் செய்து கொடுத்துள்ள வசதி என்ன?

3.  தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும் சுமார் 70,000 ஈழ அகதிகள் கைதிகளைப் போலக் கண்காணிக்கப்படுவது ஏன்
சாவுக்குப் போவதற்கு கூட ஆர்.டி.ஓ. அனுமதி பெற வேண்டும் என்கிற அளவுக்குக் கைதிகளாக நடத்தப்படுவது ஏன்?

4.  முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் வேலைக்குச் செல்வதென்றால் காலை 8 மணிக்குச் சென்று, மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்பது நமக்குத் தெரியுமா?

5. தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் இலங்கை துணைத் தூதரகத்துக்கு சென்று தமது பிள்ளைக்கு இலங்கை குடியுரிமை வாங்க வேண்டும். அதற்கு அவர்கள் இந்திய அதிகாரிகள் வழங்கும் திருமணச்சான்றை பெற்றுத் தரவேண்டும். இதற்கெல்லாம் நடையாக நடக்க முடியாமல், பலர் தம் பிள்ளைகளுக்கு இலங்கைக் குடியுரிமை சான்றிதழ் பெறுவதில்லை.
இதனால், இருபது வயது கடந்தும், நாடற்றவர்களாக ஆயிரக்கணக்கானோர்  அலைந்துகொண்டிருப்பது நமக்குத் தெரியுமா?

6. ஒருவேளை கணவன், மனைவி இருவரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராக இருந்தாலும், இத்தம்பதிகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு இங்கே குடியுரிமை பெற இயலாது. கணவன், மனைவி இருவரில் ஒருவர் சட்டவிரோதக் குடியேறியாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைக்குக் குடியுரிமை கிடையாது

7.  ஈழ அகதிகளின் பிள்ளைகள் எத்தனை உயர் படிப்பு படித்திருந்தாலும், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்பதால், அவர்கள் யாரும் அரசுத் துறையில் மட்டுமின்றி, தனியார் துறையிலும் வேலைக்கு சேர முடியாது. அவ்வாறு சேர்ந்து விட்டால் கியூ பிரிவு போலீசு அதனைக் கண்டு பிடித்து அவர்களை வேலையிலிருந்து அகற்ற ஏற்பாடு செய்து விடும். இந்தச் சூழ்நிலை காரணமாக, முதுகலைப் பட்டம் வாங்கியவர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள் கட்டுமானப் பணிகள், பெயின்டிங் முதலான தினக்கூலிப் பணிகளுக்கு மட்டுமே செல்ல முடிகிறது.  இதை நீங்கள் அறிவீர்களா?

8.  இவை இங்கிருக்கும் எந்த அரசியல் தலைவர்களுக்கும், தெரியாது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஈழம் ஈழம் என்று நரம்பு புடைக்கக் கத்தும் தமிழினத் தலைவர்கள் ஏன் இவர்களுக்குக் குடியுரிமை பெற்றுத்தர ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை?

வெற்றுக் கூச்சல்களும் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அவர்களின் இருப்பைத் தக்க வைக்கவா? அரசியல் ஆதாயத்துக்கா? அல்லது, இலங்கைத் தமிழர் நலனுக்கா?

9. இந்த 30 ஆண்டுக் காலத்தில் பிரிட்டன், கனடா, பிரான்சு போன்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களும் அவர்களது வாரிசுகளும் குறிப்பிட்ட காலத்துக்கான அகதி வாழ்க்கைக்குப் பின்னர், அந்தந்த நாட்டு குடிமக்கள் என்ற அங்கீகாரத்தை அங்கே பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையா இல்லையா?

10. இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்தோம், போராடினோம், கண்ணீர் வடித்தோம் என்று புலம்பும் நீங்கள் உங்களை நம்பி அங்கிருந்து வந்தவர்களை ஏன் கைவிட்டீர்கள்?

11. தமிழன் தமிழன் என்று கூச்சல் போடும் உங்கள் முகாம்களில் இருப்பவன் தமிழன் இல்லையா? அவனுக்கு என்ன செய்தீர்கள் இலங்கைத் தமிழர்கள் உங்களை மதிக்கவும் தொழவும்?

மற்ற நாட்டில் வாழும் (குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா) இலங்கைத் தமிழர்கள் நிலையோடு, தொப்புள் கோடி உறவு என்று வசனம் பேசும் உங்கள் நாட்டில் இருக்கும் இலங்கைத் தமிழர் நிலையை ஒப்பிட முடியுமா?

12. இதை எல்லாம் செய்யமுடியாத நமக்கு, மற்ற நாட்டில் வசிக்கும் இலங்கைத்தமிழர்கள் நம் தமிழகத் தமிழர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சொல்ல என்ன உரிமை இருக்கிறது
அங்கு அவர்கள் குடியுரிமை பெற்று நலமாக பொறியாளர்களாக, மருத்துவர்களாக, பல்துறை நிபுணர்களாக நல்வாழ்வு வாழ்கின்றனர். அவர்களோடு இங்கிருக்கும் இலங்கைத் தமிழர்கள் நிலையை ஒப்பிடமுடியுமா?

ஒருவேளை நம் இரக்கம், கருணை எல்லாம் நம் வீட்டுக் கதவைத் தட்டாதவரைதானா?

இவ்வளவே என் கேள்விகள்.

பின் இணைப்பாக உள்ளவை, பல்வேறு இணையப் பதிவுகளிலிருந்து
நான் தொகுத்தவை.
அவற்றை ஆதாரமாக இணைத்துள்ளேன்.

போற்றலும் தூற்றலும் இனி உங்கள் மனசாட்சிக்கு!
இலங்கையின் முள்வேலி முகாம்களாவது உலகத்துக்கு அம்பலமாகியிருக்கின்றன. தமிழகத்தின் அகதி முகாம்களின் ஈழத் தமிழ் மக்கள் படும் துயரம் யாருக்கும் தெரிவதில்லை.
தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சிறப்பு முகாம் அகதிகளை, ஒரு அரசாணை மூலம் ஜெயலலிதாவே விடுவித்துவிட முடியும். ஆனால் போர்க்குற்ற விசாரணை, பொருளாதாரத் தடை, பொதுவாக்கெடுப்பு என்று சவடால் தீர்மானங்கள் கொண்டு வரும் ஜெயலலிதா, அதை ஏன் செய்ய மறுக்கிறார்? அவருடைய துதிபாடிகளான தா.பா., வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ஏன் இதைக் கேட்க மறுக்கிறார்கள்?
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும் சுமார் 70,000 ஈழ அகதிகள் கைதிகளைப் போலக் கண்காணிக்கப்படுவது ஏன்? சாவுக்குப் போவதற்கு கூட ஆர்.டி.ஓ. அனுமதி பெற வேண்டும் என்கிற அளவுக்குக் கைதிகளாக நடத்தப்படுவது ஏன்? இன்று ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த விவரங்களே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முகாம்களுக்கு அருகில் உள்ள போலீசு நிலையங்களின் அதிகாரிகள் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேவைப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்குஆள் அனுப்ப வேண்டியிருப்பதும், ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் இன்னபிற துயரங்களும் தமிழக மக்கள் பலரும் அறியாதவை. இவை போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் வழமையான அத்துமீறல் காரணமாக நடைபெறும் அநீதிகளல்ல.
இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் மேற்கொண்டு வரும் சதித்தனமான கொள்கையின் ஒரு அங்கம்தான், தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் துன்பம். இலங்கையின் முள்ளிவாய்க்காலும் முள்வேலி முகாம்களும் மட்டுமல்ல; இங்குள்ள அகதி முகாம்களும், சிறப்பு முகாம்களும் கூட இதற்கான சான்றுகளே.
செப்டம்பர் 91-இல் ஆபரேசன் ஃபிளமிங்கோஎன்ற நடவடிக்கை மூலம், நாகை முதல் குமரி வரை 300 கி.மீ கடற்கரையோரம் முழுவதும் போலீசு சோதனை கைதுகள் நடந்தன. புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடற்கரையோரம் இருந்த அகதி முகாம்கள் தமிழகத்தின் உட்பகுதிகளுக்கு மாற்றப்பட்டன.
குறிப்பான எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல், புலி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத்தமிழர்கள் யாரை வேண்டுமானாலும் கைதிகளாக அடைத்து வைப்பதற்கு ஏற்ப சிறப்பு முகாம்கள் எனப்படும் அறிவிக்கப்படாத சிறைகள் உருவாக்கப்பட்டன. புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2,060 ஈழத்தமிழர்கள் இந்தச் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
முகாம்களில் இல்லாமல் வெளியில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகாமை போலீசு நிலையத்தில் ஆஜராகி, தமது முகவரியைப் பதிய வேண்டும் என்றும், இவ்வாறு செய்யத் தவறுபவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் 25.9.92 அன்று அரசு உத்தரவிட்டது. இவ்வாறு போலீசு நிலையத்தில் பதிவு செய்து பதிவு எண் பெறாதவர்கள் யாரும், வேறு நாடுகளுக்கு செல்லவும் இயலாது என்றும் இந்த உத்தரவு கூறியது.
மருத்துவம், பொறியியல், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளுக்கு ஈழத்தமிழ் அகதிகளுக்கு முந்தைய தி.மு.க. அரசு அளித்திருந்த இட ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஈழ அகதிகளின் பிள்ளைகள் 12-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று ஜெ. அரசு ஆணை (3.9.91) பிறப்பித்தது. அகதி முகாம்களுக்கான உதவிகள் நிறுத்தப்பட்டன. அவை பராமரிப்பின்றி புறக்கணிக்கப்பட்டன.
முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் வேலைக்குச் செல்வதென்றால் காலை 8மணிக்குச் சென்று, மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. முகாம்களில் உள்ளவர்களை வேறு முகாம்களில் உள்ள அவர்களது உறவினர்கள் யாரும் சந்திக்க வேண்டுமென்றால், தாசில்தார் மற்றும் கியூ பிரிவு போலீசின் எழுத்து பூர்வமான அனுமதியைப் பெறவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஈழ அகதிகள் அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதி நடத்துவது என்பது அரசு நிர்வாகத்தின் இயல்பான நடைமுறையாகவே மாற்றப்பட்டு இன்று வரை தொடர்கிறது.
இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தமிழகத்திலுள்ள ஈழ அகதி முகாம்கள் மீதான போலீசு கண்காணிப்பு நீங்கவில்லை. புலிகள் மீதான தடையை தொடர்வதற்காகவே சிறப்பு அகதி முகாம்கள் பராமரிக்கப்படுகின்றன. ஈழம் தொடர்பான போராட்டத்தைத் தடுப்பது மட்டுமின்றி, தேவைப்பட்டால் மீண்டும் எழுப்புவதாக இருந்தாலும், அது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு கவனமாக உள்ளது. இதற்காகவே மத்திய, மாநில உளவுத்துறைகள் தொடர்ந்து வேலை செய்கின்றன.
அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடாமல் இருப்பது, விரும்பியபடியெல்லாம் அகதிகள் மீது அடக்குமுறை செலுத்துவதற்கான வாய்ப்பை இந்திய அரசுக்கு வழங்கி இருக்கிறது. ஈழ அகதிகள் தமது உரிமைகள் என்று எதையும் சட்டபூர்வமாக கோர இயலாது என்பது மட்டுமல்ல, இந்தியாவில் அகதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக ஐ.நா.வும் தலையிட இயலாது.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டு, அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட இருந்த ஈழ அகதிகள், பிரிட்டிஷ் அரசின் உத்தரவுக்கு அந்நாட்டின் நீதிமன்றத்திலேயே தடை பெற்றனர். இப்படி ஒரு உரிமை இந்தியாவில் அகதிகளுக்கு கிடையாது. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி ஈழத்தமிழ் அகதிகள் பெற்றிருக்கும் எந்த ஜனநாயக உரிமையும் இங்குள்ள அகதிகளுக்கு கிடையாது.
அகதி என்பதை ஒரு வழக்குச் சொல்லாக நாம் பயன்படுத்திய போதிலும், சட்டப்படி இங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்லர். அவர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவின் உள்ளே நுழைந்திருக்கும் சட்டவிரோத குடியேறிகள்என்பதுதான் இந்திய அரசு அவர்களுக்கு வழங்கியிருக்கும் தகுதி. அகதி முகாம்களில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு மானிய விலையில் சில சலுகைகள் அரசால் அளிக்கப்பட்டாலும் சட்டப்படி அவர்களது நிலையென்னவோ இதுதான்.
தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் இங்கிருக்கும் இலங்கை துணைத் தூதரகத்துக்கு சென்று தமது பிள்ளைக்கு இலங்கை குடியுரிமை வாங்க வேண்டும். அதற்கு அவர்கள் இந்திய அதிகாரிகள் வழங்கும் திருமணச்சான்றை பெற்றுத் தரவேண்டும். இதற்கெல்லாம் நடையாக நடக்க முடியாமல், பலர் தம் பிள்ளைகளுக்கு இலங்கைக் குடியுரிமை சான்றிதழ் பெறுவதில்லை.
ஒருவேளை கணவன், மனைவி இருவரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராக இருந்தாலும், இத்தம்பதிகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு இங்கே குடியுரிமை பெற இயலாது. கணவன், மனைவி இருவரில் ஒருவர் சட்டவிரோதக் குடியேறியாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைக்குக் குடியுரிமை கிடையாது என்று, 2003 – இல் வாஜ்பாயி அரசு (தி.மு.க., ம.தி.மு.க., நெடுமாறன் உள்ளிட்டோரின் ஆதரவு பெற்ற அதே வாஜ்பாயி அரசுதான்) சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. இப்படிப் பிறந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் இரண்டு நாட்டிலும் குடியுரிமை பெற இயலாமல், நாடற்றவர்கள் என்ற நிலையில் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, ஈழ அகதிகளின் பிள்ளைகள் எத்தனை உயர் படிப்பு படித்திருந்தாலும், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்பதால், அவர்கள் யாரும் அரசுத் துறையில் மட்டுமின்றி, தனியார் துறையிலும் வேலைக்கு சேர முடியாது. அவ்வாறு சேர்ந்து விட்டால் கியூ பிரிவு போலீசு அதனைக் கண்டு பிடித்து அவர்களை வேலையிலிருந்து அகற்ற ஏற்பாடு செய்து விடும். இந்தச் சூழ்நிலை காரணமாக, முதுகலைப் பட்டம் வாங்கியவர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள் கட்டுமானப் பணிகள், பெயின்டிங் முதலான தினக்கூலிப் பணிகளுக்கு மட்டுமே செல்ல முடிகிறது.
2009 முள்ளிவாய்க்கால் முடிவு ஏற்படும் வரை, மீண்டும் தாய்நாடு சென்று வாழ்க்கையை மீளமைத்துக் கொள்வோம் என்ற ஒரு நம்பிக்கை ஈழ அகதிகள் பலருக்கு இருந்தது. இன்று அது இல்லை. இலங்கைக்கும் போக முடியாது, இந்தியாவிலும் குடியுரிமை கிடைக்காது என்ற சூழ்நிலையில்தான் பல அகதிகள் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு உயிரைப் பணயம் வைத்துப் புறப்படுகிறார்கள். இவர்களை மடக்கிப் பிடித்து இலங்கைக்கோ, சிறைக்கோ, சிறப்பு முகாமுக்கோ அனுப்புகிறது தமிழகத்தின் கியூ பிரிவு உளவுத்துறை போலீசு.
இந்த 30 ஆண்டுக் காலத்தில் பிரிட்டன், கனடா, பிரான்சு போன்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களும் அவர்களது வாரிசுகளும் குறிப்பிட்ட காலத்துக்கான அகதி வாழ்க்கைக்குப் பின்னர், அந்தந்த நாட்டு குடிமக்கள் என்ற அங்கீகாரத்தை அங்கே பெற்றிருக்கிறார்கள்.
இங்கேயும் ஈழத்தமிழ் அகதிகளுடன் அவர்களது பிள்ளைகளான ஒரு இளம் தலைமுறை இந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறது. இவர்கள் இலங்கை மண்ணைக் கூட மிதித்ததில்லை. ஆனால் தொப்பூள் கொடி உறவு கொண்டாடும் தமிழகத்தில் இவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகிறது. இங்கேயே வாழ்வதா, இலங்கை செல்வதா என்பது அவர்களது தெரிவு. ஆனால், ஈழத்திலிருந்து வந்த அகதிகள் மற்றும் அவர்கள் வாரிசுகள் அனைவருக்கும் இந்திய அரசு குடியுரிமை தரவேண்டும் என்பது மட்டுமல்ல, குடியுரிமை வழங்குமாறு இலங்கையையும் இந்திய அரசு நிர்ப்பந்திக்கச் செய்யவேண்டும்.
சர்வதேச விதிகள் மற்றும் நியதிகளின்படி, இவ்வாறு குடியுரிமை தரப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தை தனது உளவுத்துறைகள் மூலம் சீர்குலைத்தது, அமைதிப் படை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்து அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போர்க்குற்றம் நிகழ்த்தியது, இன அழிப்புப் போரில் சிங்கள அரசுக்குத் துணை நின்று வழிகாட்டியது போன்ற குற்றங்களை இந்திய அரசு செய்திருக்கிறது. இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, தன்னால் அழிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக்கு இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இனக்கொலைக் குற்றத்தில் கூட்டாளியாக இருந்த குற்றத்தை மறைப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும்தான் ஈழத்தில் வீடு கட்டித் தருகிறோம்,சாலை போட்டுத் தருகிறோம் என்று இந்திய அரசு ஏமாற்றி வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமையை மறுத்து வருகிறது.
ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, தப்பிச் செல்லவும் முடியாது என சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?
ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் முடியாது என்று எல்லாப் புறமும் சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பதுமுள்ளிவாய்க்கால் என்றா?
தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாமில் 67 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.

இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது.
78ஆயிரம் ஈழத்தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடியில் இருந்து துரத்தி,
140
ஈழத்தமிழ் முஸ்லிம்களை சுட்டுகொன்ற விடுதலை புலிகள் தலைவன் பிரபாகரன்.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு ; வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர்.
யாழ்ப் பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது
1990
ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருயாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் 500 ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஒலிபெருக்கிகள் அலறிக்கொண் டிருந்தன.இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்
ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.
1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.
முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாச லுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுத பாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக 9 நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள்.
ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து 9 மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
அந்த வருடம் ஜூலை மாதம் 30 திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் 9 முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150 இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். 20 வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.
990 ஆகஸ்டு-03 —-காத்தான்குடி படுகொலை
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியானது.
-1991
ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளி வாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாக்கள் தினமாக
பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்
மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனை வழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ பாசிசப் புலி பயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்
03-08-1990
காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலி பயங்கர வாதிகளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்
1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர்
1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படு கொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள்மீது மிகப் பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின ஆனால் இன்று பல கொலை வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத கும்பல் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கபட்டனர், பயங்கர வாத கொட்டம் அடங்கியது நாட்டில் அமைதியை விரும்பிய அனைவரும்மகிழ்ந்தனர். தமிழ் புலி பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள் மாற்று சமூகத்துடன் நற்பண்புடன் இனியாவது பழக கற்றுகொள்ளவேண்டும் குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லிம்களுடன்
கிழக்கு முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர..??? வரலாறு
2006
ஆகஸ்ட் -01- மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை
முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது
ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கர வாதபுலிகள் ஒரு மாதமே ஆன சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து தலை சிதறடிக்கப்பட்ட பின் வீசி எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
நியாயவாதிகளே, நடுநிலையாளர்களே, மனசாட்சி உள்ளவர்களே இதற்க்கு பதில் சொல்லுங்கள் இது நியாயமா?
சக தமிழ் இனத்தை கொன்று ஊரை விட்டு துரத்திய பிரபாகரன் தேசியத்தலைவனா?

1980களின் தொடக்கம்வரை இலங்கையின் இனப் பிரச்சினை ஒரு பெருங்கதையாடலாக உருவெடுக்கவில்லை. விடுதலைக்குப் பின்பு பல் தேசிய இனங்கள் வாழும் எந்தவொரு சமூகமும் எதிர்கொள்ளும் சமூக அரசியல் நெருக்கடிகளையே இலங்கையும் எதிர்கொள்ள வேண்டியி ருந்தது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டிவிட முடியும் என்னும் நம்பிக்கை அப்போதைய தமிழ்த் தலைவர்களுக்கும் அதில் அக்கறை காட்டிவந்த இந்திய அரசியல் தலைமைகளுக்கும் இருந்து வந்தது. 1975இல் தமிழ் மக்களிடையே சிறுசிறு ஆயுதக் குழுக்கள் தோன்றி அதைத்தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட அரசியல் கொலைகளும்கூட ஒரு பெருங்கதையாடலுக்கான தொடக்கமாக இருக்கவில்லை. 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வுதான் அதற்கான துவக்கப்புள்ளியாக இருந்தது. அது தமிழர்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் சிங்கள இனவெறிக் குழுக்களால் விடுக்கப்பட்ட நேரடிச் சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ளும் பொறுப்பை ஆயுதக் குழுக்கள் ஏற்றுக்கொண்டு பதிலடி கொடுக்கத் தொடங்கியபோது இலங்கையின் இனப்பிரச்சினை பெருங்கதையாடலாக உருவெடுக்கத் தொடங்கியது. அடுத்த சில வருடங்களில் அதன் நாயகர்களும் எதிர்நாயகர்களும் உருவாக்கப்பட்டார்கள். தாக்குதல்களும் எதிர்த்தாக்குதல்களும் சாகசங்களும் நிரம்பிய பெருங்கதையாடல். வெற்றி தந்த பெருமிதங்களும் தோல்வியால் விளைந்த அவமானங்களும் இழப்பின் துயரங்களும் அப்பெருங்கதையாடலை வசீகரமாகத் தாக்கிக்கொண்டிருந்தன. 1983 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு இலங்கையின் அரசியல் சமன்பாடுகள் வேகமாக மாறத் தொடங்கின. இனப் பிரச்சினையின் வரலாற்றையும் அது வேர்கொண்டிருக்கும் அரசியலையும் பற்றி மேலோட்டமான புரிதல்களை மட்டுமே கொண்டிருந்த தமிழகத்தின் பொதுச் சமூகம் அதிகமாக உணர்ச்சிவசப்படத் தொடங்கியது. வெளிக்கடைச் சிறையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல்கள், தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் முதலான தமிழ்ப் போராளிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமை பற்றிய செய்திகள் தப்பிவந்த அகதிகளின் வழியாகவும் போராளிகள் வழியாகவும் கிடைக்கப்பெற்றபோது தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது. சிங்கள இனவெறிக் குழுக்கள் மீதும் காவல்துறை மீதும் தாக்குதல் நடத்தி ஆயுதக் குழுக்கள் பதிலடி கொடுத்த நிகழ்வுகள் தமிழர்களின் தொன்மை வீரத்தைப் பறைசாற்றுபவையாகக் கட்டமைக்கப்பட்டன. போராளிக் குழுக்களின் தலைவர்கள் நாயகர்களாக உருவெடுக்கத் தொடங்கியது அப்போதுதான். இங் குள்ள அரசியல்கட்சிகளின் நிலைப்பாடுகள் பிறகு வேகமாக மாறத்தொடங்கின. 1983இல் மக்கள் ஜனநாயகப் புரட்சியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த இந்திய மார்க்சிய லெனினியக் குழுக்கள் ஈழப் பிரச்சினையில் முன்வைத்த நிலைப்பாடுகள் தமிழ் அடையாளத்தின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைப் பரிந்துரைத்த மார்க்சிய லெனினியக் குழுக்கள் தமிழ் உணர்வாளர்களின் கடும் கண்டனத்திற்குள்ளாக வேண்டியிருந்தது. அவை பிளவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழ்த் தேசியம், தமிழகத்தின் மார்க்சிய லெனினியக் குழுக்கள் உள்ளிட்ட எல்லோருக்குமான புதிய அரசியல் முழக்கமானது. விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் தமிழ் வீரத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்ட பிறகு ஈழப்பிரச்சினை வேறு எந்த வகையிலும் தீர்க்க முடியாத சிக்கலான ஒன்றாக மாறியது. சகோதர இயக்கங்களுக்கிடையே உருவான பகை, யுத்தம், வன்முறை, அழித்தொழிப்பு முதலான அரசியல் பிழைகள் அப்பெருங்கதையாடலின் அங்கங்களாயின.
முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது ஒரு முடிவு, பிறிதொன்றின் தொடக்கம். கூறியது கூறலும், நடந்தது அனைத்தும் நன்றாகவே நடந்தது என்பதும், நடந்தது அனைத்துமே தவறானது என்பதும் வரலாற்றை மறுக்கும் பார்வையாகும். ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தரவுகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிகரமாக ஆதரித்த தமிழ்த் தலைமுறையினரை விரக்தியில் ஆழ்த்திவிடத்தக்கவை. விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களையே பிணைக்கைதிகளாகப் பயன்படுத்தியது, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது உட்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமது சக பெண்போராளியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை(1), சில விதிவிலக்குகள் தவிர அனைத்து விடுதலை இயக்கங்களும் அரசியல் மாறுபாடுகளுக்காகவும் தமது தலைமையைத் தக்கவைத்துக் கொள்ளவும் தத்தமது தோழர்களையே படுகொலை செய்தமை, போராட்டத்திற்கு நேரடியாகத் தொடர்பில்லாத மக்களைப் படுகொலை செய்தமை, இனச்சுத்திகரிப்பை ஒத்ததாக விடுதலைப் புலிகள் இஸ்லாமிய மக்களை வெளியேற்றியமை என இவை அனைத்துக்கும், விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அல்லாத இயக்கத்தவர்களும் தம்மை விமர்சனத்துக்கும் சுயவிமர்சனத்திற்கும் உட்படுத்திக்கொள்ள வேண்டும்.