Sunday, 29 November 2015

வாரம் ஒரு புத்தகம்!


கிருஷ்ணா கிருஷ்ணா!

  - இந்திரா பார்த்தசாரதி 




வாரம் ஒரு புத்தகம் என்று புத்தக அலமாரியிலிருந்து நிம்மதியாகக் கையில் கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்தை புகைப்படம் எடுத்து, நான்கு வரி கிறுக்கிக்கொண்டிருந்தேன்!

நண்பர் @kkarthic  க்கு அது பிடிக்கவில்லை போலும்.
இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா பற்றி எழுதச் சொல்லி திரி கிள்ளிப் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டார்!

சில வருடங்களுக்குமுன் முதல் வாசிப்பில் ஒரே மூச்சில் படித்துவிட்டு வைத்த புத்தகம்தானே என்று கொஞ்சம் அலட்சியமாக எடுத்தேன்!
ஒரு பிரம்மராட்சசன் போல என்னைப்  பிடித்துக்கொண்டது!

எனக்கு எப்போதுமே  பிச்சமூர்த்தி,  திஜா, அசோகமித்திரனை விட மற்ற எல்லோருமே இரண்டு படிகள் கீழேதான்!
இந்தப் புத்தகத்தின் மறுவாசிப்பு, இந்திரா பார்த்தசாரதி பற்றிய என் பார்வையை சுத்தமாக மாற்றிவிட்டது.

நல்லவேளையாக எனக்கு எப்போதும் எழுத்தாளன் பூணூல் போட்டிருப்பதோ, கருப்பாய் இருப்பதோ, மீசை வைத்திருப்பதோ அவன் எழுத்தை அணுகத் தடையாக இருந்ததில்லை!
இல்லாவிட்டால் இப்படி ஒரு புத்தக வாசிப்பு அனுபவத்தை இழந்திருப்பேன்!

போதாக்குறைக்கு அதன் பெயர் வேறு கிருஷ்ணா, கிருஷ்ணா! 

(இரண்டுமுறை! –
ஒருமுறை பிடித்த புலிவாலே இருபத்தைந்து வருடமாகியும் விடவில்லை! சரி, சொந்தக்கதை இங்கெதுக்கு!)

பயந்துகொண்டே வாங்கிய புத்தகம்!
பெயர் ராசி போலும்! இந்தமுறை கையில் எடுத்தது, மாதக்கணக்கில் கீழே வைக்க விடவில்லை!

எனக்கென்னவோ, அவதாரக் கதைகளில் ராமனைப் பிடிப்பதில்லை! ஒத்துவராத பல காம்ப்ளிகேட் ஆன ஐடியாலஜிக்களின் மொத்த உருவம் ராமன்!

புனிதன் என்ற பெயர் வாங்க, பெற்றவர், உடன்பிறந்தோர், ஊர்மிளா, ஊர் மக்கள், மனைவி, தான் பெற்ற மகன்கள் என எல்லோர் நிம்மதியையும் சந்தோஷத்தையும் காவு கொடுப்பவனை ஒரு அவதார புருஷன் என்று ஏற்க என் எளிய புத்தி ஒப்புவதில்லை!

சுவாரஸ்யமான, ரசிக்கத் தகுந்த அவதாரம், கிருஷ்ணாவதாரம்!

எந்த hard and fast rule ம் இல்லாமல், வாழ்வின் எல்லாச் சிக்கல்களுக்கும் பேக்கேஜ் தீர்வு சொல்லாத அவதாரம்!

உண்மையில் ஆண் அதிகாரம் செலுத்துவதுபோல் ஒரு மாய பிம்பம் காட்டும் நம் சமூக அமைப்பில், பெண் எவ்வளவு டாமினன்ட் என்பதுவும் அவள் மன உறுதி, வாழ்க்கைச் சதுரங்கத்தில், பெண்கள் எப்போதும் சிப்பாய்களைப் பலிகொடுத்து, ராஜாக்களைத் தக்கவைப்பதும்  கிருஷ்ணாவதாரம் சொல்லும் மறைமுகக் கதை!

நாம் எல்லோரும் அறிந்ததாய் நினைத்திருக்கும் ராதாவின் கதை, ஒரு மாறுபட்ட பார்வையில் நம் அறியாமையைச் சொல்கிறது!

ஜிரா என்ற வேடன், நாரதர் இரண்டு வடிவத்திலும் இந்திரா பார்த்தசாரதி இறங்கி அடிக்கிறார்.

கிருஷ்ணாவதாரம் சத்திரியனுமல்ல, பிராமணனும் அல்ல, ஒரு இடையன் என்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது!

அந்த அட்வான்டேஜை கிருஷ்ணன் ஆரம்பம் முதலே எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறான் என்பது வியப்பளிக்கிறது.

ஒரு தேர்ந்த மேனஜ்மென்ட் கோர்ஸ் படித்த அனுபவத்தை கிருஷ்ணனின் உரையாடல்கள் தருவது இந்தக் கதையின் மகத்தான வெற்றி!

சத்ரியர்களையும் பிராமணர்களையும் மகாபாரத காலத்துப் பெண்கள் எப்படிப் பகடையாக்கி விளையாடினார்கள் என்பதை, தனக்கேயான அங்கதத்துடன் கிருஷ்ணன் சொல்வதாய் நாரதர் பார்வையில் எழுதியிருக்கிறார் இ பா!

நாம் அறிந்த மகாபாரதக் கதையை அவ்வப்போது தொட்டுக்கொண்டு, இன்னும் சொல்லாத பல பாதைகளில் பயணிக்கிறது இந்தக் குறு நாவல்!
அவரே சொல்வதுபோல, கிருஷ்ணாவதாரத்தில் வரும் பெண்கள் எல்லோருமே சிக்கலானவர்கள்!
அவர்களின் புத்திசாலித்தனம் அவதார புருஷனையே ஆட்டுவிக்கிறது!
கண்ணனாக இருப்பதால் மட்டுமே அத்தனை பேரையும் கையாள முடிகிறது.

நாவல் ஆரம்பித்த இடத்திலிருந்து முடிக்கும் இடம் வரை எந்த இடத்திலும் ஒரு நேர்ப்பாதையில் செல்வதில்லை!

ஒரு கதைசொல்லிக்கான முழு சுதந்திரத்தையும் இந்த வடிவத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இ பா!

எந்த இடத்திலும் தன் கருத்தை அடிக்கோடிட முயலாததே அவர் எழுத்தின் வெற்றி!

பிராமணன்,அசுரன், சத்திரியன், ஆதிக்க சாதி என எல்லாவற்றுக்கும் ஒரு வரி விளக்கம், கதையின் ஊடே மறைந்து நிற்பது அழகு.

ஒரு வரி தவறவிட்டாலும், ஒரு அனுபவத்தைத் தவறவிட்டதுபோல்!

ஒரு நாள் ஒரு அத்தியாயம் படிக்க முடிந்தால் அதிகம்.
சில ஒற்றைப் பக்கங்கள் வாரக் கணக்கில் மனதில் ஏறி உட்கார்ந்துகொண்டு இறங்க மறுத்து அடம் பிடிக்கையில், ஒரு ராஜேஷ்குமார் நாவல் போல ஒரே மூச்சில் படித்து முடிப்பது இந்த எழுத்துக்கு செய்யும் துரோகம்!

இந்த நூற்றுச் சொச்சம் பக்கம் படிக்க எனக்கு ராமாயணம்,.மகாபாரதம், இரண்டாம் இடம், பாகவதம் ஆழ்வார் பாசுரங்கள் என்ற பல தலையணைகள் தேவைப்பட்டன!

மரணத்தின் வாசலில் கண்ணன் சொன்ன கதை என்பதால், பல இடங்களில் ஒப்புதல் வாக்குமூலமாகவே நகர்கிறது!

வழக்கமான இ பா நாவல்களை எதிர்பார்த்து இதைப் படிக்க ஆரம்பித்தால், ஒரு மாயச் சுழலில் நம்மை இழுத்துச் செல்லும் வித்தியாசமான கதைக்களம்.

இந்த நாவல் வாசிப்பு ஒரு அனுபவம். இது பேருக்குப்பேர் வேறுபடும்.

இதை இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு கைட்லைன் இல்லாமல், தன்போக்கில், நியாபக அடுக்கில் அவ்வபோது வருவதை எல்லாம் கண்ணனின் குரலில் சொல்லிச் செல்லும் கதை!

இதற்கு மதிப்புரை, விமர்சனம் எழுத முயல்வது, என் அடிப்படைக்கும் கீழான மோட்டார் வாகன அறிவை வைத்துக்கொண்டு செவ்வாய்க் கிரகத்துக்கு ராக்கெட் ஓட்ட முயல்வது போல்!

இந்த அனுபவத்தை அவரவர் உணரவேண்டும். ஒரே மூச்சில் படிக்க நேர்ந்தால் ஒரு சுகமான அனுபவத்தை இழக்கிறீர்கள் என்று சொல்வேன்.

இந்த நாவலை அனுபவிக்க நான் மிகச் சரியாய்க் கனிந்த காலத்தில் என்னை வாசிக்கத் தூண்டிய நண்பர் கார்த்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! 



Friday, 20 November 2015

அதுக்கப்புறம் டாக்டருக்கு என்ன ஆச்சு?

யாருக்கு லூஸ் மோஷன்?




மே ஐ கம் இன் டாக்டர்?
அதுதான் வந்துட்டீங்களே! உட்காருங்க!

தேங்க் யூ!

சொல்லுங்க!
என்னது?

என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!
ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

பேர் என்னம்மா?
மஞ்சுளா!

என்னது ஆம்பளப்பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?
டாக்டர் அது என் பேரு!

பையன் பேர சொல்லுங்கம்மா!
குஞ்சு!

மொத்தமே அதுதான் பேரா?
இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?
லூஸ் மோஷன்!

எப்படிப் போறான்?
மஞ்சளா!

அதுதான் மொதல்லியே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!

நான் ஸ்டூல் கலரைக் கேட்டேன்!
இந்த ஸ்டூல் வெள்ளை, அங்கிட்டு இருக்கே  அது சிகப்பு!

அந்த சுவர் வெள்ளை,  இந்த ஸ்க்ரீன் நீலம்!  
ஏம்மா, இது என்ன கண் ஆஸ்பத்திரியா?  

பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!
அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர்,  உடனே ஓடிப்போயிடுவான்!

அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!
இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

கடவுளே!  அம்மா, பையன் ஆய், ஆய் அது  எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!
அதுதான் சொன்னேனே, மஞ்சளா!

ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?
இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!

ஓ! சாரி!  சாப்ட்டானா?
இல்ல டாக்டர், நல்லவேளை, அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!

அம்மா, நான் அதக் கேட்கலம்மா! 
இப்படிப் படுத்தறீங்களே!

உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?
இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!

என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !
சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!

வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல!

சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!
அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!

அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க

நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!
அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!

ஓ சாரி!
அதுதான் சரி பண்ணிடுவீங்களே, அப்புறம் எதுக்கு சாரி?

ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு  கேட்டேன்!
இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!

சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?
தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?
ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!

என்னம்மா இவ்வளவு பச்சையா ...
இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை!

பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?
இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

முருகா! ஏம்மா இப்படி! 

உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?
அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!

ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?
வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?

ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?


அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா?

சரி, எத்தனைதடவை போனான்?
எங்க டாக்டர்?

ம்! என் தலை மேல!

லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?
அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ!
நாலுதடவை!

தண்ணி மாதிரி போனானா?
இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!

அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா! 

சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!

இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!
இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!
அப்புறம் இந்த பௌடர,
பூசிவிடவா டாக்டர்?

ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely  கொஞ்சம் பூசிவிடுங்க!

 சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?
சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா!
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!
டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?

அம்மா பரதேவதே,
என் பேர் மஞ்சுளா டாக்டர்!

உங்க பையன் குஞ்சுவைக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?
மோஷன் பின்னாடிதான போகும், அப்புறம் ஏன் குஞ்சுவை...

அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!
இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!

நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!


டாக்டர், டயட் சொல்லலியே!
என்ன எங்கம்மா பேச விட்டே நீ!

காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!
அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!

தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்க வரைக்கும்!

அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?

உங்க வீட்டுல நாய் இல்லைன்னாவெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

ஏன், அவங்க  உங்க செட் அப்பா?
கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!

டாக்டர் பீஸ்?
நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!

அப்போகண்டிப்பா செட் அப்புதான்! 
நான் வரேன் டாக்டர்!
வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!