Saturday, 22 July 2017

பிக் பாஸின் பிழை அரசியல்!

மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!பொதுவாகவே தொலைக்காட்சி எனக்குக் கொஞ்சம் தொல்லைக்காட்சி!

பின்னிரவிலிருந்து நள்ளிரவு வரை ராஜா பாடல்களும் பழைய பாடல்களும் பார்ப்பது தவிர என்றைக்கேனும் செய்திகளோ, டென்னிஸ், கிரிக்கெட்டோ! மற்றபடி அந்தப் பக்கமே திரும்புவதில்லை!

கமலஹாசன் என்ற ஒரு மந்திரச் சொல்லோடு ஆரம்பித்ததால் பிக்பாஸ் துவக்கநாளில் பார்த்தேன்!

இதுவரை கமலஹாசன் அவ்வளவு செயற்கையாக நடித்து நான் பார்த்ததில்லை!
அதிலும் அந்த "யா பேபி!"

பாவமாக இருந்தது அந்த முதல்நாளில் பார்த்த கமலின் நகைச்சுவை முயற்சிகள்!

முதன் முதலில் அவர் விளம்பரத்தில் வந்து அடிவயிற்றிலிருந்து பீப்புள்ஸ் போத்தீஸ்”  என்று உறுமியபோது ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது!

எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிப்பதில்லை என்ற வேறு இரண்டு நடிகர்களின் நிலைப்பாடும் அதற்கு அவர்கள் சொன்ன நம்பகமான காரணங்களும் மனதில் உறுத்தினாலும்,
ஹெச் வி பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்குத் தன் விளம்பர நடிப்பின் வருமானம் எல்லாவற்றையும் வழங்கப்போவதாக அவர் சொன்னதால், ஏற்றுக்கொள்ள முடிந்தது!

இப்போது ஆடித் தள்ளுபடிக்கு வேறு விளக்கம்!

இதுவும் அந்தக் குழந்தைகளுக்குத்தானே போகப்போகிறது!
(கொடுத்திருப்பார்தானே, சமீப நாட்களாக இவ்வளவு சுத்தமாகவும் சத்தமாகவும் அறம் பேசுபவர் தான் சொன்னபடி கொடுக்காமலா இருந்திருப்பார்?)

அதை விடுங்கள்!

இந்த பிக்பாஸ் ஏனோ என்னை முதல்நாளே ஈர்க்கவில்லை! (கமல் இருந்தும்)!
அதிலும், அன்று ஜூலி தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடிவந்து சொன்ன காரணம் குமட்டியது!

அதன்பின் இணையம், குறிப்பாக ட்விட்டர்,  பிக்பாஸ், ஓவியா என்று ஓயாமல் அலறிக்கொண்டிருக்க, அப்படி என்னதான் நடக்கிறது என்ற ஆர்வத்தில் இரண்டு நாள் முன்பு மீண்டும் கொஞ்சநேரம் பார்த்தேன்!

என் புரிதலில் பிழை இல்லை எனில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி,
நூறு நாட்கள் ஒரு வீட்டில் சிலர் வெளி உலகத்தொடர்பு சிறிதும் இன்றி நேரம், காலம் எதுவுமே அறியாமல் வாழ்ந்து ஏற்படும் உளவியல் அழுத்தங்களை மீறி வெல்வது என்பதுதானே?

ஆனால், நான் பார்த்த அன்று வெளி ஆட்கள் வந்து கபடி விளையாடிக்கொண்டிருந்தார்கள்!

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் உலகநாயகன், விஜய் டிவியின் கபடி ஒளிபரப்பை பிரபலப்படுத்த மேற்கொண்ட இந்த அடிப்படை விதிமுறை மீறலை இன்றுவரை கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு சின்ன அதிர்ச்சி!
தன் வளர்ச்சிக்காக விஜய் டீவி எந்த நிலைக்கும் இறங்குவது புதிதில்லை!
ஆனால், அறத்தின்பால் ஆழ்ந்த பற்றும், நேர்மையை உரக்கப் போதிக்கும் பண்பும் கொண்ட உலகநாயகன், இந்த விதிமீறலையும் காணாததுபோல் காசுக்காகக் கடந்துபோவார் என்பது கொஞ்சம் அதிர்ச்சி!

ஒரு சாதாரண தொலைகாட்சி நிகழ்ச்சியின் விதி மீறலையே காசுக்காக மழுப்பும் இவர், அரசியல் செய்வோரின் விதி மீறல்களுக்கு சீறுவது நகை முரண்!

நாளை, எல்லோரும் கூறுவதுபோல் இவர் அரசியலுக்கு வந்தால், (தான் அரசியலுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாக இப்போது ஒரு புது விளக்கம் தந்திருக்கிறார்!) இதுபோல் எத்தனை சமரசங்களைச் செய்துகொள்வார்?

பொதுவாக, தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதில்லை!

குறிப்பாக, எம்ஜியாரும் சிவாஜியும், தாங்கள் வளரும்போதே அரசியலில் தீவிர ஈடுபாட்டோடு, தங்களுக்குப்பிடித்த தலைவர்களோடோ, கோட்பாடுகளோடோ உறுதியாகப் பயணித்தார்கள்!

இதில், திரைக்கு வெளியே நடிப்பதில் அவ்வளவு சமர்த்தில்லாத நடிகர் திலகம் விலகிக்கொள்ள, மக்கள் திலகம் நாடாண்டது வரலாறு!

அவர் அரசியலுக்கு இழுத்துவந்த தன்னோடு இணைந்து நடித்த கதாநாயகிகளில், ஜெயலலிதா மட்டும் சில காரணங்களால் தாக்குப்பிடித்ததோடு,  எம்ஜியாரையே தூக்கி சாப்பிட்டதும் தமிழகத்தின் அடுத்த சாபம்!

அதற்குப்பின், ஒரு படத்தில் ஒற்றை சீனில், திரை ஓரத்தில் தலை காட்டிய ஒவ்வொரு நடிகனும், தன்னை நாடாளப் பிறந்தவன் என்றே கற்பனை செய்துகொண்டு வாழ ஆரம்பித்தார்கள்!

மார்க்கெட் இழந்த நடிகர்களின் புகலிடமானது அரசியல்!

இதில் வித்தியாசமாய், சாலை விரிவாக்கத்துக்காக (இழப்பீடு கொடுத்து) தன் கல்யாண மண்டபத்தை இடித்துவிட்டார்கள் என்று கட்சி ஆரம்பித்தவர் ஒருவர்!
நல்லவேளையாக, அவர் குடும்பத்தாரின் ஆதிக்கம், தமிழகத்தைக் காப்பாற்றியது!

இன்னொருவர், இருபத்தைந்து ஆண்டுகளாக ஆண்டவன் உத்தரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்!

ஆனால், ஒரு அறிவுஜீவி என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ளப் பெரிதும் மெனக்கெடும் கமல், இதிலிருந்தெல்லாம் கொஞ்சம் விலகியே இருந்தார்!

ஆனால் சமீப காலங்களாக இவரது அரசியல் விமர்சனங்கள் புருவம் உயர்த்த வைக்கின்றன!

இத்தனை நாட்களாக வராத அறச்சீற்றம் இப்போது வருவது பிழை இல்லை. ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட காலகட்டமும், அதற்கு மீடியாவின் ஒளிவெள்ளமும் இதன்பின் இன்னொரு மறைமுக செயல்திட்டம் இருக்குமோ என்று யோசிக்கவைக்கிறது!

சில மாதங்களுக்குமுன், ஊரூராக, தற்செயலாகவோ, தேடிச்சென்றோபோய் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சால்வை போர்த்திவந்தார்
அதன்பிறகே இவரின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி பீறிட்டுத் தெறிக்கிறது!

இன்று, எடப்பாடியாரின் பொற்கால ஆட்சியின் செயல்பாடுகள் (???) மக்கள் மனதில் ஒரு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஒரு கவர்ச்சிகரமான தலைமை இல்லாமல் அதிமுக சிதறிப்போய் தடுமாறிக்கொண்டிருப்பதும் யாருக்கு சாதகம்?
பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் அதன் செயல் தலைவருக்கும்!

இது உறுத்தவேண்டியவர்களுக்கு உறுத்தியிருக்கிறது!

ஸ்டாலினின் சரமாரி சட்டமன்ற சாடல்கள், பத்திரிக்கை பேட்டிகள் மீடியா வெளிச்சம் பெறுவதும், இந்த செயல்படாத அரசின் பிழைகள் திமுகவுக்கு சாதகமாவதும் யாருக்கோ பிடிக்கவில்லை!

ஆதாரத்தோடு ஸ்டாலின் கேட்கும் கேள்விகளின் பலன் அவருக்குப் போய் சேர்ந்துவிடுமோ என்ற பதட்டத்தில் அத்தனை வெளிச்சத்தையும் திசை திருப்ப ஒரு பிரபலமான முகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது

வழக்கம்போல் பாபா போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று போய்விட்டார்!

அவர்களுக்கு இப்போது கை கொடுக்கிறார் கமலஹாசன் என்ற ஐயம் எழுவது பிழையில்லை என்பதுபோல், இன்று மீடியாக்கள் கமலஹாசனை முன்னிறுத்துகின்றன!

அதிமுகவை கேள்வி கேட்பதில் திமுக சுணங்குவதுபோலொரு மாயையை உருவாக்க,
கேள்வி கேட்க வேறொருவன் பிறந்துவிட்டான் என்ற மாயையை உருவாக்க,

அந்த பிக்பாஸ் கொடுக்கும் அசைன்மெண்ட்டை திறம்பட நடித்துவருகிறார் கமலஹாசன்!

நாளை தேர்தல் வரும்போது, அதிமுக தங்கள் காலடி நாய்க்குட்டி என்ற நிலையில், திமுகவின் விஸ்வரூபத்தை திசைதிருப்பவும் மழுப்பவும் தன்னை உபயோகித்துக்கொள்கிறார்கள் என்பதை உணராதவர் அல்ல கமலஹாசன்!

அரசியல் சதுரங்கத்தில் தனக்கு சிப்பாய் வேடமா, ராஜா வேடமா, அந்த வேடத்துக்கு என்ன விலை தனக்குக் கிடைக்கும், அதற்கு தான் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை அறியாதவரல்ல உலகநாயகன்!

அவர் மற்ற நடிகர்களைப்போல் அரைகுறை அல்ல! 'அனைத்தும் அறிந்த' "ஆண்டவர்!"

எல்லாமே ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்!
அப்போது யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!


அதுவரை பிக்பாஸின் ஆட்டம் தொடரட்டும்!!
Tuesday, 11 July 2017

சரக்கு மற்றும் சேவை வரி, வரமா சாபமா?

சரக்கு மற்றும் சேவை வரி!ஒரு வழியாக அலை ஓய்ந்துவிட்டது!

மீம் க்ரியேட்டர்களெல்லாம் பிக் பாஸ் பக்கம் ஒதுங்கிவிட்டார்கள்!

இந்த முதல்நாள் முதல்காட்சி விமர்சன வெறி அடங்கட்டும் என்று காத்திருந்தேன்.

வழக்கம்போல் எல்லை மீறிய பொங்கல்கள்!

இதில் மிகப்பெரிய கொடுமை, தமிழின் நம்பர் ஒன் வாரஇதழ் என்று அட்டையில் தானேசொல்லிக்கொள்ளும் நூறாண்டு பாரம்பர்யம் உள்ள ஒரு இதழ், தன் இணையதளத்தில் 28 % GST யும் 30% வருமானவரியும் சேர்த்து, 58 % என்று ஒரு கட்டுரை வெளியிடுகிறது.

மேலும், நாடெங்கும் ஒரே வருமானம் இல்லாத நிலையில் ஒரே வரிவிதிப்பு எப்படி என்று ஒரு அற்புதமான கேள்வியை ஆதரிக்கிறது!

ஒருகாலத்தில் அறிவாளிகள் படிக்கும் இதழ் என்று அதற்கு ஒரு பிம்பம் வேறு!

தேவையான அளவு விமர்சனங்களும், மீம்ஸ்களும் ஃபோட்டோ ஷாப்களும் பகிரப்பட்டு, ஒருவழியாய் மோடியை ஒரு முட்டாளாகவும், மீட்பராகவும் படம் வரைந்து பாகம் குறித்தாகிவிட்டது!

மோடியை இதன் தகப்பனாக்கிப் போற்றவோ, தூற்றவோ வேண்டியதில்லை!

வாஜ்பாயி காலத்தில், 2000ஆம் ஆண்டில்  விதை போடப்பட்டு, அவ்வப்போதைய ஆளும் கட்சிகளால் (காங்கிரஸ் உட்பட) ஆதரிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளால் (மோடி உட்பட) எதிர்க்கப்பட்டு, இப்போது 2017ல் மோடி அரசு வழக்கம்போல் அவசரக்கோலத்தில் நடைமுறைப்படுத்தியேவிட்டது!

G.S.T.

மத்திய கலால் வரி, வணிக வரி, மதிப்பு கூட்டு வரி, உணவு வரி, மத்திய விற்பனை வரி, ஆக்ட்ராய், பொழுதுபோக்கு வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, விளம்பர வரி, இன்னும், போனவரி, வந்தவரி என்று எல்லாவற்றையும் ஒழித்து, நாடு முழுமைக்கும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவைவரி!

முதலில் பல்முனை வரிவிதிப்பு பற்றிக் கொஞ்சம்!

ஒரு பொருளைத் தயாரிக்க பல நிலைகள்!

மூலப்பொருள் கொள்முதல், தயாரிப்பு, மற்றும் மதிப்புக்கூட்டல், அழகாக பேக் செய்தல், விநியோகஸ்தர்களுக்கு அனுப்புதல், மொத்த வியாபாரிகள், பிறகு சில்லறை வணிகர்கள், ஷோ ரூம்! இந்தக் கடைசி நிலையில்தான் அது நுகர்வோரை அடைகிறது!
இதுதான் ஒரு பொருளின் மொத்த சுழற்சி!

இதில் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படும் வரி, அடுத்த கட்டத்தில் அதன் கொள்முதல் விலையோடு சேர்ந்துவிடுவதால், இறுதியாக விதிக்கப்படும் வரி மட்டுமே வெளிப்படையாகத் தெரிவதால், அந்தப் பொருளின் மீதான வரி முழுமையாக நுகர்வோருக்குத் தெரிவதில்லை!

இந்த நிலையில், இதுவரை இந்தியாவில் வரியே விதிக்கப்படாதது போலவும், இப்போது இதுதான் முதல் வரி விதிப்பு என்பது போலவும், பொருள்களின்மீது விதிக்கப்படும் மறைமுக வரி, வருமானத்தின்மீது விதிக்கப்படும் நேர்முக வரி இரண்டும் ஒன்றே என்பதுபோல் எழுதுவதும், பரபரப்புக்காகவும், பத்திரிக்கை வியாபாரத்துக்காகவும் செய்யப்படும் கீழ்த்தர உத்தி!

இதில் சோஷியல் மீடியாக்களும் விதிவிலக்கல்ல!

ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனலில் ஒரு பொருளாதார நிருபரும் இதே போலொரு கருத்தைப் பகிர்ந்ததாக அறிந்தேன்!

மக்களை முழு முட்டாளாகவே வைத்திருப்பதுதான் இவர்களுக்கு வசதி!

மத்திய அரசு 16 % வரி, அதன்மீது மாநில அரசின் விற்பனை வரி 12 %  இவை இணையும்போது மொத்த வரி 29.92 % இதில் நுகர்வோர் கண்ணில் படுவது 12 % மட்டுமே!

இப்போது இறுதி விற்பனை நிலையில் ஒரே தவணையாக விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அதிகபட்சமாக 28 % பளிச்சென்று கண்ணில் படுகிறது.

இதுதான் இத்தனை பொங்கலுக்கும் காரணம்!

இப்போது அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு, அனைத்துப் பொருட்கள் மீதும் (பெட்ரோல், மது வகைகள் நீங்கலாக) - மாநில அரசுகள் எதிர்த்ததால் - ஒரே வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது!

இதனால் மாநில அரசுகளுக்கு நேரிடும் இழப்பு, அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மத்திய அரசால் ஈடு செய்யப்படும்.

நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்கும்!

ஒரு பொருள், ஒரே மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கேயே விற்கப்பட்டால் அதன்மீதான ஜிஎஸ்டி மத்திய, மற்றும் மாநில ஜிஎஸ்டி என்று இரு சம பாகமாக (18 % எனில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தலா 9%) பிரித்துக்கொள்ளப்படும்!

ஆனால், பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, வேறு மாநிலத்தில் விற்கப்பட்டால், அதே 18 %  ஐஜிஎஸ்டி என்ற பொதுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மத்திய அரசுக்கு 9%, பொருள் விற்கப்பட்ட மாநிலத்துக்கு 9% என்று பிரித்து வழங்கப்படும்!

இதில் இன்புட் டேக்ஸ், அவுட்புட் டேக்ஸ் பற்றியெல்லாம் எழுதினால் இன்னும் தியரியாக போரடிக்கும்!

மொத்தத்தில், ஒருமுனை வரிவிதிப்பால், கண்டிப்பாகப் பொருள்களின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம்!

0%, 5%, 12%, 18%, 28%  என்றிருக்கும் வரிவிதிப்புக்களில் 28 % என்பதை 20 அல்லது 22% ஆக்கியிருக்கலாம் என்பது ஒரு குறை!

ஆனால், ஏறத்தாழ 80 விழுக்காடு பொருட்கள் 18% வரிவிதிப்பிற்கு குறைவாகவே இருப்பது நல்ல விஷயம்!

அதானி, அம்பானியின் பெட்ரோலுக்கு GSTயிலிருந்து விலக்கு என்பது இன்னொரு குற்றச்சாட்டு!

பெட்ரோல் மற்றும் மதுபானங்களை GST வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது என்று போராடியது மாநில அரசுகள்! 
மாநிலங்களின் வருமானம் பெருமளவு இவற்றின்மீதான வரியை நம்பியே இருக்கிறது!

GSTயின் அதிகபட்ச வரம்பான 28 % விதிக்கப்பட்டாலே, மாநிலங்களின் பங்காக 14 %தான் கிடைக்கும்!

ஆனால் தமிழக அரசு பெட்ரோல் மீது 38 %, மது வகைகள் மீது 50 விழுக்காட்டுக்கு மேலும் வரி விதிக்கும்போது, இதற்கு எப்படி ஒப்புக்கொள்ளும்?

ஏன், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் 14% வரி விதித்து முன்மாதிரியாக இருக்கக்கூடாது?

மாநில உரிமைகள் என்ற வரம்பில்,
மஹாராஷ்ட்ரா அரசு வாகனப் பதிவு கட்டணங்களை 2% உயர்த்தியுள்ளது!

தமிழக அரசு திரையரங்குகளின் மீதான கேளிக்கை வரியை 28 % GSTக்கு மேல் இன்னொரு 30 % ஆகமொத்தம் 58 % என விதித்துள்ளது!

 இதற்குத்தான் இங்கு மக்களும், திரைப்படத் துறையினரும் அதிக அளவில் பொங்கித் தீர்த்தார்கள்!

ஏழைகளின் ஒரே பொழுதுபோக்காக சினிமாவின் மீது இந்த வரிவிதிப்பு அநியாயம் என்ற குரல் விண்ணை முட்டியது!

ஒரு சின்னக் கணக்கு!

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பம் திரையரங்குக்கு படம் பார்க்க ஒருமுறை போவதாக வைத்துக்கொள்வோம்!

டிக்கெட், ஆன்லைனில் 153 X 4 = 612 ரூபாய்!

புக்கிங் சார்ஜ் 30 X 4 = 120 ரூபாய்! (அவர்களுக்கு ஆள் சம்பளம், டிக்கெட் அச்சடிப்பு செலவைக் குறைப்பதால் நியாயமாகத் தள்ளுபடி தரவேண்டும்!)

பாப்கார்ன் 135 X 4 = 540 ரூபாய்! (இது ஐந்து நட்சத்திர விலையைவிட அதிகம்)

தண்ணீர் ஒரு லிட்டர் 75 X 4 = 300 ரூபாய்! (அனைவருக்கும் இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கவேண்டும் என்பது சட்டம்!)

காஃபி 85  X 4 = 340 அல்லது பெப்ஸி, கோக் 110 X 4 = 440 ரூபாய்!

பார்க்கிங் 50 ரூபாய்!

மொத்தம், ஏறத்தாழ 2000 ரூபாய்! 
இதே குடும்பத்துக்கு ஒருமாத மாளிகைப்பொருள்களின் விலை இது!

இதுதான் ஏழைகளின் பொழுதுபோக்கா?

சத்தம்போடாமல் டிக்கெட்டின் அடிப்படை விலையை 120 ரூபாய் என்று உயர்த்திவிட்டார்கள்!

வயதானவர்கள், குழந்தைகள் என யார் போனாலும், குடிக்கத் தண்ணீர்கூட எடுத்துப்போகக்கூடாது!

பெரும்பாலான திரையரங்குகளில் ஏசி பாதிநேரம் வேலை செய்வதில்லை! 

இந்த லட்சணத்தில் இவர்களுக்கு என்ன முகம் இருக்கிறது போராட?

அனைத்து மாநிலங்களிலும் திரைப்படங்களை உருவாக்கும் திரைத்துறை தொழிற்சாலை, இந்த ஒரு மாநிலத்தில்தான் வருங்கால முதல்வர்களை உருவாக்குகிறது!

இதில் தமிழ்ப் பெயர் வைத்தால், வன்முறையை, காதல் என்ற பெயரில் பெண்களைச் சிறுமைப்படுத்துவதை, சாதியை உயர்த்திப் பிடிப்பதை எல்லாம் வரிவிலக்கோடு செய்யமுடியும் சுதந்திரம் வேறு!

இவர்களுக்கு இன்னும் 42 % அதிகம் வரி விதித்தாலும் தவறில்லை!

இவர்களுக்குக் குரல் கொடுப்பதைவிட , 
குடிசைத்தொழில், 20 லட்ச ரூபாய்க்குக் கீழான வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கு வரி விலக்கு என்பதோடு, 28 % என்பதை 24 % ஆக்குவதோ, அல்லது 28 % வரிவிதிப்பு வரம்பில் இருக்கும் சில பொருட்களை 18 % வரம்புக்கு மாற்றக்கோருவதோ நியாயமாக இருக்கும்!

இந்த GST வரிவிதிப்பால் பாலாறும் தேனாறும் ஓடுவது நிச்சயமில்லை!

ஆனால், பல்முனை வரிவிதிப்பை கண்காணிக்க அரசுக்கு ஆகும் செலவு, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் நாள் கணக்கில் காத்திருப்பதில் ஏற்படும் மறைமுக விலை உயர்வு, டீசல் செலவு, அங்கு அழப்படும் லஞ்சம் இவையெல்லாம் குறையும்போது ஏற்படும் விலை குறைப்பு மக்களுக்கு நல்லதுதானே?

மேலும், எளிமையான கணக்கு, அக்கவுண்ட் பராமரிப்பு இவை எல்லாம் நன்மைகளில் சேராதா?

இரட்டைக் கணக்குகளை பராமரித்து வரி ஏய்ப்பு செய்வது குறைந்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கூடும்போது, அரசின் கடன் சுமை குறைவதும் GST தரும் இன்னொரு  நல்ல பலன்!

முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் இந்த சரக்கு மற்றும் சேவை வரி வரவேற்கத் தகுந்ததே!

எந்தப் புரிதலும் இல்லாமல் பழைய வரியோடு GSTயையும் வசூலித்த உணவுவிடுதிகளைக் கேள்வி கேட்காமல் பில்லை எடுத்து வந்து இங்கு பகிர்வதும், கேள்விமுறையே இல்லாமல் அடிப்படையின்றி விலைகளை ஏற்றி லாபம் பார்ப்பதும் சந்தர்ப்பவாதம்!

மோடின்னா அடிப்போம் க்ரூப்புக்கு வேறொரு வாய்ப்பைத் தர மோடி தயாராகவே இருக்கிறார்!

நிதியாண்டை ஜனவரி - டிசம்பர் என்று மாற்றும் தேவையற்ற வேலையை 2018 முதல் செய்யப்போகிறார்.

அப்போது பொங்கிக்கொள்ளலாம், இப்போது பொங்குமுன், GST பற்றிக் கொஞ்சம் புரிந்துகொள்ளலாம்!
Friday, 30 June 2017

முகம்மது பின் லோடியின் ராஜ்யத்தில்!

முகம்மது பின் லோடி!


தலைநகரம்!

அமைதியின்றி அமர்ந்திருக்கிறார் மன்னர் முகம்மது பின் லோடி!

ஏதோ தகவலை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் தெரிகிறது!

அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள்!

“நம் சித்து விளையாட்டுக்கள் ஏன் அந்தத் தென்கோடி முனையிலிருக்கும் மக்களிடம் மட்டும் எடுபட மறுக்கின்றன?”
“தனக்கேற்ற தளபதிகள் அங்கு யாருமே அமையாதது ஏன்?”

இன்று பிரதான ஆலோசகர் ஆலம் ஷா ஒரு தீர்வோடு வந்து சந்திப்பதாய் சொல்லியிருக்கிறார்!

இதோ, அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பி இன்றோடு எட்டு நாட்கள் ஆகிவிட்டன!

பயணத் திட்டம் ஏதுமின்றி, இயல்புக்கு மாறாக இப்படி ஊரோடு அடங்கி உட்கார்ந்திருப்பது கை நடுக்கத்தை ஏற்படுத்தி அவர் கோபத்தை இன்னும் தூண்டி விட்டிருக்கிறது!

“யாரங்கே”

கூச்சல் கேட்டு ஓடிவந்த காரியதரிசி, “தேநீர் வேண்டுமா அரசே!”

“எனக்கே தேநீரா?

 உகாண்டாவுக்கும் உக்ரேனுக்கும் இன்று மாலைக்குள் பயணத்துக்குத் தயார் செய்யச் சொல்லியிருந்தேனே என்ன ஆயிற்று?”

“மன்னா, தாங்கள் இதுவரை அங்கு நான்குமுறை வந்துபோய்விட்டதால், என்ன காரணம் சொல்லி உங்களுக்கு அழைப்பு விடுப்பதென்று தூதரக அதிகாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள்!”

“ராஜாங்க அழைப்பு விடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசிக்க என்று சொல்லச்சொல்!

நாளை காலைக்குள் நான் விமானம் ஏறியாக வேண்டும்!

வாங்கிவைத்த புது பச்சைநிற ஷெர்வானி வீணாகக் கிடக்கிறது!”

தலையசைத்து காரியதரிசி திரும்ப, ஜன்னல் வழியே ஆலம் ஷா வருகிறாரா என்று பார்க்க ஆரம்பித்தார்!லோடி,

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு மக்கள் தேர்ந்தெடுத்த அரசர்!

பேசாமலே ஊமையாய்க் காலம் தள்ளிய முந்தைய அரசர் மீதிருந்த இனம் புரியாத வெறுப்பு,
ஊடகங்களின் திட்டமிட்ட புகழ் வெளிச்சம் 
அபாரமான மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரப்பிரிவு
இவற்றின் அசரவைக்கும் பிரச்சாரம்!

இவை திரும்பத் திரும்ப மக்கள் மனதில் லோடியை ஒரு தேவதூதனாக கட்டமைத்திருந்தன!

பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசிய தோரணை, மக்களுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர் என்ற பிம்பம், அவர் குறுநில மன்னராக இருந்த மாநிலத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவதாய் செய்யப்பட்ட விளம்பரங்கள்!

மக்கள் இந்த அறுபத்து நான்கு ஆண்டுகால ஜனநாயகத்தில் இன்றுதான் தங்களுக்கேற்ற ரட்சகனைக் கண்டடைந்ததாய் பூரித்து, மிருக பலத்தோடு அவரை ஆட்சியில் உட்காரவைத்தனர்!

இதோ, மூன்று முழு வருடங்கள் ஓடிவிட்டன!

நாடு தழுவிய அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில்!

அதை சந்திப்பதில் ஒன்றும் பெரிய சிக்கல்கள் இல்லை!

தங்களை வழிநடத்த பிரதான எதிர்க்கட்சி தேர்ந்தெடுத்திருக்கும் இளைய ராஜகுமாரன் இருக்கும்வரை லோடிக்கு இன்னும் நூறு தேர்தல்களிலும் எதிர்ப்பு இருக்கப்போவதில்லை!

இருந்தும் ஓரத்தில் கொஞ்சம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது!

இளவரசரின் சகோதரி வந்தால் மாக்கள் என்ன செய்யும் என்பது சின்னக் கேள்விக்குறி!

இந்த மூன்று வருடத்தில்,

பொதுக்கூட்ட மேடைகளில் சிங்கமெனக் கர்ச்சித்த அகண்ட மார்பும், தினவெடுத்த தோள்களும் நாடாளுமன்றத்தில் பூனைபோல் பதுங்கிக் கிடக்கும் அவலத்தை நாடு நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது!

எந்த விவாதத்திலும் மன்னர் பேசி மக்கள் பார்க்கவே இல்லை!

தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் தொலைதூர நாடுகளிலும் ஓயாது இன்னும் கர்ஜனை செய்யும் மாவீரர், நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திலும் வாயே திறப்பதில்லை!

மக்களால் மௌனசாமியார் என்று மறுதலிக்கப்பட்ட இன்னொரு தாடிக்காரர் கேட்கும் கேள்விகள் பதிலற்றுத் திரும்பும் அவலம் இந்த மூன்றாண்டுகளில் மக்களுக்குப் பழகிப் போய்விட்டது!

ஆனால், அதை மக்கள் யோசிக்கவே அனுமதிக்காமல், எப்போதும் மக்களை ஒரு பரபரப்பான சூழலில் வைத்திருக்கத் தெரிந்திருக்கிறது லோடியின் விளம்பர மற்றும் வியாபாரப் பிரிவுக்கு!

எந்தவித முன்னேற்பாடும் செய்துகொள்ளாமல், தன் முதல் அதிரடியை ஆரம்பித்தார்!

ஒரு நள்ளிரவில் மிகை மதிப்பு நாணயங்கள் செல்லாது என்று அறிவித்தார்!

நிச்சயம் அதற்கான ஹோம் ஒர்க்கை செய்துவிட்டே இதைக் கையில் எடுத்திருப்பார் என்று நம்பியவர்களை தன் குளறுபடிகளால் மண்டையில் அடித்தார்!

சினிமா தியேட்டரிலும், ரேஷன் கடைகளிலும் நின்று பழக்கப்பட்ட ஜனக்கூட்டம், தங்கள் பணத்தில் ஒற்றை நோட்டை எடுக்க, விடியவிடியத் தெருவில் நின்றது!

ஆனாலும், தங்கள் ரட்சகர் தங்களுக்கு நல்லதே செய்வார் என்று நம்பினர் மக்கள்!

அம்பானி, அதானி எல்லோரும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துவிட்டனர். எனவே, நீங்களும் விட்டுக்கொடுங்கள் என்று முதல் அஸ்திரத்திலேயே அம்பானி அதானிகளோடு தாங்களும் இணை வைக்கப்பட்ட பெருமிதத்தில் விழுந்த மக்கள்,
இந்த சிரமங்களும், நாட்டின், கூடவே தங்களின், முன்னேற்றத்துக்குத் தரும் சின்ன விலை என்றே நம்பித் தொலைத்தார்கள்!

மிகக் கேவலமான திட்டமிடல் மற்றும்  எந்தவித முன்னேற்பாடும் இல்லாத அறிவிப்பால், திட்டத்தின் நோக்கமே பாழானது!

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் இந்த நாணய மதிப்புக்குறைப்பு நடவடிக்கை என்று ஊமைச் சாமியார் என்று வர்ணிக்கப்பட்டவர் பாராளுமன்றத்தில் கர்ஜிக்க, சிங்கம் அந்தப்பக்கமே வராமல் தலைமறைவானது!

கொஞ்சம் கொஞ்சமாக ஐம்பத்தாறு இன்ச் மார்பு சுருங்கித் தளர்வதை மக்கள் உணர ஆரம்பித்தது லோடியை முன்னிறுத்தி விளம்பரப்படுத்திய கூட்டத்துக்கு உறைக்க ஆரம்பித்தது!

உடனே, ஆரம்பித்தது ஆயிரம் ஆண்டு கால உத்தி!

பிரச்சினையை திசைதிருப்ப, என்னேரமும் மக்களை பரபரப்பாகவே வைத்திருந்தால் போதும் என்பதையும், மக்களின் மறதி தங்களின் மாமருந்து என்பதையும் உணர்ந்த ஆலோசனைக்குழு, அதற்கான களத்தை உடனே கட்டமைத்தது!

ஒழுக்கம், கற்பு பாரம்பர்யம் என்று ஒரு அஸ்திரம் முதலில் எடுக்கப்பட்டது!

காவிகள் கலாச்சாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு  பலநூறு ஆண்டுகள் பின்னால் போய் இடுப்பில் இலைதழைகளைக் கட்டிக்கொண்டு கையில் தடியோடு அலைந்தனர்!

ஆணையும் பெண்ணையும் எங்கு இணையாகப் பார்த்தாலும் வெகுண்டுபோய் அடி வெளுக்க ஆரம்பித்தார்கள்!

நாடே நம்பமுடியாமல் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை வேடிக்கை பார்த்தது!

அது கொஞ்சம் ஓய்ந்ததும் அடுத்துத்  தனக்கு மிகவும் பழக்கப்பட்ட மத ரீதியான பிரிவினை ஆயுதத்தைக் கையில் எடுத்தார்!

நினைத்ததுபோலவே அது மிகச் சிறப்பாக வேலை செய்தது!

நாடுமுழுக்க திடீர் பசுநேசர்கள் தோன்றினார்கள்!

வெட்டிக் கூறுபோட்டு வெளிநாட்டுக்கு அனுப்பும் தங்கள் புரவலர்கள் தலையசைப்போடு உள்நாட்டில் மட்டும் மாட்டுக்குத் தாய்வேஷம் போட்டுவிட்டனர்!

எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு காவி கட்டிக்கொள்ளும் வடக்கு உடனே உடனே என்று தலை சாய்த்தது!

லோடியின் கவைக்குதவாத, உணர்ச்சிவசப்பட்ட எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவுகளால் ஏற்பட்ட தொல்லைகளை வசதியாக மறந்து, வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டு மாட்டுக்குக் குடைபிடிக்கக் கிளம்பியது!

எந்த நாட்டிலும் பெரும்பான்மையாக இருக்கும் மதம் தீவிரவாதத்தைக் கையிலெடுப்பது எத்தனை பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு அண்டை நாடுகளிலேயே உதாரணங்கள் இருந்தும், மற்ற மதத்திலிருக்கும் சில சில்லறைத் தீவிரவாதிகளைக் காரணம் காட்டி இந்த முட்டாள்தனமான மூர்க்கம் ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் பட்டது!

முகலாயப் படையெடுப்பின் நிழல்கூட விழாத தென்கோடி ராஜ்ஜியம் எப்போதும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் இருப்பது!

இங்கு இதுவரை பிரிவினை வாதத்தின் கூக்குரல்கள் ஈடுபட்டதே இல்லை!

இங்கும் லோடிக்கு அமைந்தது ஒரு அற்புதமான தளம்!

சென்ற தேர்தலின்போது, ஒத்த சிந்தனையும் தோழமையும் இருந்தாலும் லோடியா, லேடியா என்று மல்லுக்கட்டி நின்ற தோழி, 
உடல்நலம் குன்றியோ, தற்கொலை செய்துகொண்டோ, கொலை செய்யப்பட்டோ 
இறந்தபோது, அதை உலகுக்கு அறிவிக்க லோடியின் தூதுவராக வந்தார் வெங்காய வியாபாரி!

அந்த மர்மநாட்களில் என்ன நடந்ததோ, அவசர அவசரமாக அந்தப் பெண்மணி புதைக்கப்படும்வரை இரண்டு நாட்களும் அந்த இடத்தை விட்டு அகலாமல் காவல் காத்தார் வெங்காய வியாபாரி!

இன்றுவரை அந்த மரணத்தின் மர்மமுடிச்சு அவிழ்க்கப்படவில்லை என்பதோடு, அந்தப் பெண்ணின் அடிமைக்கூட்டம் மூன்றாய்ப் பிரிந்து லோடியின் காலில் விழுந்து கிடந்தது!

அவர்களுக்கு அதில் ஏதும் பிரச்னை இல்லை!

எப்போதும் குனிந்து வளைந்து காலையே பார்த்துக்கொண்டு தானுண்டு தன் கொள்ளைகள் உண்டு என்று காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு விழும் கால் மாறியது எந்தக்குழப்பத்தையும் தரவில்லை!

நிமிர்ந்து முகம் பார்க்கும் வழக்கம் இல்லாதது எத்தனை சவுகரியம்!

ஆனாலும் அந்த அடிமைக் கூட்டத்தை அச்சத்திலேயே வைத்திருக்க முடிவு செய்த லோடி, பிரதான ஆலோசகர் அறிவுரையின்படி சில சித்து வேலைகளைச் செய்து வருமானவரித்துறை, புலனாய்வுத்துறைகளை அனுப்பி மூன்று குழுக்களையும் போட்டி போட்டுக்கொண்டு எப்போதும் தன் காலடியில் கிடக்கவைத்தார்!

இப்போது வெறும் கண்ணசைவிலேயே ஏறத்தாழ தன்னுடைய ஆட்சியே நடந்தாலும், நேரிடையாக அங்கு நிரந்தரமாகக் காலூன்ற இதைவிட ஒரு சாதகமான சமயம் வாய்க்காது என்பதால்,  எல்லோருக்கும் நல்லவனாக முயலும் ஒரு ஆன்மீகம் பேசும் நாடக நடிகரை வீடுதேடிப்போய் பேசிப்பார்த்தார்!

வழக்கம்போல் வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் ஊறவைத்து அவர் பரிமாற, நாத்திகம் பேசும் இன்னொரு நடிகருக்கும் வலை விரித்துப்பார்த்தார்!

அவரும் திடீர் ஞானோதயம் வந்தவராக அரசியல் பேசிப்பார்த்தார்!

ஏனோ, தன் இன்டலக்சுவல் வேடம் களைவது பிடிக்காமல், தன் மறைமுக ஜாதிப்பெருமை பேசும் வழக்கமான பாணிக்கே அவர் திரும்பிவிட, இன்னும் அந்த ஆன்மீகவாதியின் வருகையை நம்பியே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தாங்கமுடியாமல்தான் இப்போது ஆலம் ஷாவிடம் அந்தப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் வருகைக்குக் காத்திருக்கிறார்!

இந்தக் காத்திருப்பு எல்லாமே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ராஜகுரு தேர்தல் வரைக்கும்தான்!

அதிலும்தான் எத்தனை சிக்கல்!

உண்மையில் அரசராகியிருக்க வேண்டிய லோடியின் குருநாதர், கால் நூற்றாண்டு காலமாக அரியாசனத்துக்காக ஆவலோடு காத்திருக்கும் மோத்வானியை,இரக்கமே இல்லாமல் ஏறி மிதித்துவிட்டே  அரியணை ஏறினார் லோடி!

அப்போது மோத்வானிக்கு ராஜகுரு பதவி தருவதாக சமாதானப்படுத்திவிட்டே இவரை அரசராக்கியது ஆட்டுவிக்கும் அமைப்பு!

அப்போதே ராஜகுருவாக அவரை அனுமதிப்பதில்லை என்பதை மனதில் முடிவு செய்துகொண்ட லோடி, தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மோத்வானி மீதான சிபிஐ வழக்கை தூசிதட்டி எடுத்தார்!

புரவலரின் கண்ஜாடை புரிந்த ஊடகங்கள் பேயாட்டம் போட்டன!
புன்னைகையோடு ரசித்துக்கொண்டிருந்தார் லோடி!

நினைத்தது நடந்தது!
ராஜகுரு போட்டியிலிருந்து வேதனையோடு விலகினார் மோத்வானி!

ஆனாலும், தான் நினைத்தவரை ராஜகுரு ஆக்கப் போதுமான பெரும்பான்மை இல்லாமல் தவித்த லோடி, பல்லைக் கடித்துக்கொண்டு தென்கோடி அடிமைகளை வீட்டுக்கு விரட்டாமல் சகித்துக்கொண்டார்!

அடிமைகளையும் சும்மா சொல்லக்கூடாது!

போட்டி போட்டுக்கொண்டு நேரில் வந்து காலில் விழுந்து முறைவைத்துத் தொழுது போயினர்.

எதிர்க்கட்சிகள் வாயை அடைக்க, ஒரு தலித்தை ராஜகுரு ஆக்குவது என்ற முடிவும் நீர்த்துப்போக மிக ராஜதந்திரமாக, மாற்று மதத்தினர் மீது வெறுப்பும் வன்மமும் கொண்ட ஒருவரை தலித் என்ற அலங்காரப் போர்வைக்குள் மறைத்து முன்னிறுத்தியது வழிநடத்தும் கூட்டம்!

அவர் தேர்ந்தெடுக்கப்படவும், அடிமைகளின் வாக்குகள் அவசியம் என்பதால், அடுத்த மாதம்வரை அவர்களுக்கு ஆயுள் நீட்டிப்பு!

அதற்குப்பின், ஏதோஒரு அடிமைக்கூட்டத்தின் முதுகில் ஏறி சவாரி செய்வதா, அல்லது பலகாலமாக  முயல்வதுபோல் நடிகரை முன்னிறுத்தி, கூட்டணி அமைப்பதா என்பதை முடிவு செய்யும் நேரம் நெருங்கிவிட்டது!

அப்படி நடிகர் ஒத்துவரும் பட்சத்தில், சிதறுண்டு கிடக்கும் மூன்று அடிமைக்குழுவையும் உருத்தெரியாமல் அடிக்க, ஆயிரம் ஊழல் ஆதாரங்களை முன்பே திரட்டி வைத்தாகிவிட்டது!

அந்தக் கட்சியே காணாமல் போனால் பின், பழைய பரம்பரை எதிரி மட்டும்தான்!

வேகமாக உள்ளே வந்தார் ஆலம் ஷா!

என்னாயிற்று ஆலம் ஷா?

மன்னிக்கவேண்டும் அரசே, நடிகர் முடிவெடுப்பதற்கு இன்னும் இருபது வருடம் ஆகும்போல!

மேலும், அப்படியே அவர் வந்தாலும், நம்மை முழுமையாக ஆதரிப்பார் என்று என்னால் நம்பமுடியவில்லை!

எனில், நடிகரின் பரமவிரோதி அந்த மருத்துவரை வசை பாடலை ஆரம்பிக்கச்சொல்!

முன்னாள் நடிகர், ஈழம் பேசி வயிறு வளர்க்கும், மூளை மழுங்கடிக்கப்பட்ட ஒரு கூட்டத்தை வழிநடத்தும் அந்த நபரை இன்னும் வேகமாகப் பேசச்சொல்!

நமக்கு ஆதரவு தரமாட்டார் எனில் அவர் வராதிருப்பதே நமக்கு நலம்!

ஆனால், பிரதான எதிர்க்கட்சியின் பின்னால் மக்கள் போய்விடுவார்கள் என்று உளவுத்துறை சொல்கிறது அரசே?

எப்போதும் உளவுத்துறை சொல்வதற்கு எதிர்மாறாகத்தானே நடக்கும் ஆலம்,

இல்லை, இந்தமுறை அவர்கள் சொல்வது சரிதானோ என்று ஐயமாக இருக்கிறது!

நீயே பயப்படுவதால், வேறு வழிதான் தேடவேண்டும்!

அலைக்கற்றை என்று காற்றில் படம் வரைந்தோமே அதன் தீர்ப்பைத் தயாரிக்கச் சொல்!

அரசே, அது சற்றே சிரமம்! நமது தரப்பு மிகவும் கேவலமாக நீதிமன்றத்தில் அவமானப்பட்டிருக்கிறது!

நம் நாட்டில் குமாரசாமிகள் எங்கும் உண்டு ஆலம்!

தற்காலிகமாக ஒரு தீர்ப்பைச் சொல்லச் சொல்!
அப்பீலில் அவர்கள் மீள்வதற்குள் தேர்தல் முடிந்துவிடும்!

இன்னொரு விஷயம் அரசே!

உக்கிரப் பிரதேசத்தில் உங்களுக்கு ஒரு போட்டியாளரை நாமே உருவாகிவிட்டோமோ என்று தோன்றுகிறது!

ஆலம், அவர் இன்னும் அரசியலில் அரிச்சுவடியில் இருக்கிறார்!

இப்போதுதான் பசு, தலித் என்று பழம்கதை பேசிக்கொண்டிருக்கிறார்!

அப்படி அவர் உருவெடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்!

அரசியல் குரு மோத்வானியைவிடவா இவர்?

மேலும் இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் ஒற்றை வரி, ஓகோ என்ற வாழ்க்கை என்ற திட்டம், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மக்களை வேறு எதையுமே சிந்திக்கவிடாமல் பைத்தியக்கார நிலையிலேயே வைத்திருக்கும்!
அது போதும் அடுத்த தேர்தல் வரை!

கவலையை விடு!
ராஜகுரு தேர்தல் வேலைகளை முடிக்கிவிடு, நான் ஒரு வாரம் சுற்றுப்பயணம் நாளை கிளம்புகிறேன் ஆலம்ஷா !

அப்படியே அரசே!

இன்னொரு விஷயம்!

நான் போகும் நாட்டுக்கு வழக்கம்போல், தற்செயலாக அதானியை வரச்சொல்!

அங்கு கனிமங்களுக்குக் குறைவில்லை!
நம் அரச வங்கியின் அந்த நாட்டுக்கிளை யாருக்குக் கடன் கொடுப்பதென்று தடுமாறிக்கொண்டிருக்கிறதாம்!

புன்னகைத்தவாறே உடை மாற்றப் போனார் முகம்மது பின் லோடி!